எதிர்வரும் 26ம் திகதி கொண்டாடப்படவுள்ள இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து உள்நாட்டு விமான நிலையங்களிலும் சோதனையும், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. குடியரசு தினத்தை யொட்டி டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சு உத்தரவிட்டு உள்ளது.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையங்களிலும், முக்கிய இடங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் காவல்துறையினர் உஷார் நிலையில் இருந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு விமான பயணிகளும், அவர்களது உடமைகளும் கடுமையாக சோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
விமான நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விமான நிலையத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.