வலி. வடக்கு ஊறணி பிரதேசம் இன்றையதினம் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கடற்றொழிலை நம்பி வாழும் குடும்பங்களின் நலன் கருதியும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாகவும் குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடற் தொழிலை மேற்கொள்வதற்காகவும் சுமார் 400 நீளமுடைய கரையோர பகுதியும், 2 ஏக்கர் நிலமும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த நிலப்பகுதியானது தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஞானசோதியினால் யாழ் மாவட்ட அரசஅதிபர் என்.வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர் எஸ்.சிவமோகனன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
வலி.வடக்கு ஊறணி பிரதேசம் தைப்பொங்கலன்று உரிமையாளர்களிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்படவுள்ளது
Jan 12, 2017 @ 15:39
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வலி. வடக்கு ஊறணி பிரதேசம் தைப்பொங்கலன்று உரிமையாளர்களிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்றையதினம் அறிவித்துள்ளார்.
கடற்றொழிலை நம்பி வாழும் குடும்பங்களின் நலன் கருதியும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாகவும், ஊறணி கடற்கரைப்பகுதி எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் செல்வதற்கான எல்லைக் கட்டுப்பாடுகள் இராணுவத்தினராலோ அல்லது கடற்படையினராலோ விதிக்கப்படவில்லை எனவும் மீனவர்கள் தமது பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு தமது எல்லை வரை கடற்றொழிலை மேற்கொள்ள முடியுமெனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.