உச்சநீதிமன்ற தடையைமீறி ஜல்லிக் கட்டு நடப்பதை தடுக்கும் நடவடிக்கையில் தமிழகப் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடக்காமல் தடுக்க காளைகள் வளர்க்கப்படும் கிராமங்களை கண்காணிக்க பல்துறை அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தமிழகத்தின் மதுரை மாவட்டம் அலங் காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல்களை தமிழகப் காவல்துறையினா தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடந்த இரு வருடங்களாக ஜல்லிக் கட்டு தடைசெய்யப்பட்டிருந்த நிலையில், தடையை நீக்குமாறு தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றிருந்தன.
தடையை மீறி ஜல்லிக் கட்டை நடத்துவோம் என்ற குரல் தமிழகத்தில் வலுப்பெற்று வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறாத வகையில் ஜல்லிக் கட்டை தடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபடுகிறது.