குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய 58 நிபந்தனைகளுக்கு இணங்கியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
நாட்டுக்கு மிகவும் பாதகமான 58 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அரசாங்கம் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை மீளவும் பெற்றுக் கொள்கின்றது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுள்ளதுடன் இவற்றை அமுல்படுத்தி அதன் முன்னேற்றம் குறித்தும் தெளிவுபடுத்தவும் அரசாங்கம் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்து சர்சதேச தரத்திலான பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அமுல்படுத்தல், முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் புனர்வாழ்வு திட்டங்களை முடிவுறுத்தல், கைதிகளின் உரிமைகளை உறுதி செய்தல், மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குதல், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீளாய்வு செய்தல், காணாமல் போனவர்கள் தொடர்பான காரியாலயம் அமைத்தல், மனித உரிமை பாதுகாத்தல் குறித்த செயன்முறை ஒன்றை அறிமுகம் செய்தல், ஊழல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், தேர்தல் சட்டத்தை தித்தி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.