குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிலிப்பைன்ஸில் இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி ரொட்றிகோ டுரேற்ரே (Rodrigo Duterte ) தெரிவித்துள்ளார். போதைப் பொருள் பிரச்சினை மிகவும் ஆபத்தானதாக அமைந்தால் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்த நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் இராணுவச் சட்டங்கள் எதுவும் அமுல்படுத்தப்படாது என ஒரு மாதத்திற்கு முன்னதாக ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்திருந்தார். கடந்த ஆண்டு நடுப்பகுதியில் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டது முதல் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் ஜனாதிபதி கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இதுவரையில் போதைப் பொருள் சம்பவங்களின் காரணமாக சுமார் 6000 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபட்ட மற்றும் பயன்படுத்திய சுமார் ஒரு மில்லியன் பேர் பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் உள்ளிட்ட அனைத்து அச்சுறுத்தல்களிலிருந்தும் நாட்டை பாதுகாப்பதாக உறுதியளித்து தாம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாகவும், போதைப் பொருள் பிரச்சினைகளினால் நாட்டில் சுமார் நான்கு மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தென் பகுதி நகரான டாவோவில் வர்த்த சம்மேளன உறுப்பினர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.