குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யா மீதான சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து ரஸ்யா மீது அதிகளவில் சைபர் தாக்குதல்கள் மற்றும் இணைய ஊடுறுவல்கள் இடம்பெற்று வருவதாக ரஸ்ய பாதுகாப்புப் பேரவையின் செயலாளர் நிக்கோலை பற்றுசேவ் (Nikolai Patrushev) தெரிவித்துள்ளார்.
ரஸ்யா, சைபர் தாக்குதல்களில் ஈடுபடுவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என குறிப்பிட்டுள்ள அவர் இணைய வழித் தொடர்பாடலின் கேந்திர நிலையமாக அமெரிக்கா காணப்படுவதாகவும், அநேகமான இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள் அமெரிக்காவில் இருந்து இயங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இவ்வாறான பின்னணியில் ரஸ்யா மீது குற்றம் சுமத்துவது நியாயமற்றது எனவும் அமெரிக்கா , பாதுகாப்பு மற்றும் ஏனைய நோக்கங்களுக்காக இணைய சேவை வழங்கும் நிறுவனங்களின் தகவல்களை பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.