குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சென்று தமது தேவைகளை பெற்றுக் கொள்வதற்கான கட்டட வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என மாற்றுத்திறனாளிகளினால் தெரிவிக்கப்படுகின்றது.
பூநகரி வாடியடிச் சந்தியிலே புதிய பிரதேச செயலகக் கட்டடம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இங்கு செல்லும் மாற்றுத்திறனாளிகளே தாம் சென்று வரும் வகையில் கட்டடத்தில் கட்டட அமைப்பு மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பூநகரி பிரதேச செயலர் ச.கிருஸ்ணேந்திரனிடம் கேட்டபோது புதிய பிரதேச செயலகத்தின் கட்டட வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டட வசதிகளையும் உருவாக்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்டட வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதன் காரணமாக பழைய பிரதேச செயலகக் கட்டடத்தில் காணிக்கிளை, திட்டமிடல்கிளை, தொடர்ந்து இயங்குகின்றதெனவும் வாகனத் தரிப்பிடங்கள், வேலிகள் அமைக்கும் பணிகளும் இடம் பெறவுள்ளன எனவும் தம்மை நாடிவரும் மக்களுக்கான பணிகளை இலகுபடுத்துவதற்கான வழிகளிலும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.