குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்காக படைவீரர்களை சிறையில் அடைக்க வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் கோரியுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்களின் அடிப்படையில் படையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது என சுட்டிக்காட்டியுள்ள அவர் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக பயங்கரவாதத்தை இல்லாதொழித்த படையினரை தண்டிக்க வேண்டுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கலப்பு நீதிமன்றமொன்றை அமைத்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்து இந்த வரிச் சலுகைத் திட்டம் பெற்றுக்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியமை நியாயமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து யுத்தங்களும் கொடூரமானது எனவும், பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்தை தயார் எனவும் எந்தவொரு பிரஜையினதும் உரிமைகள் முடக்கப்படவில்லை எனவும் அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு அறிவிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.