194
தமிழர்களின் பிரச்சனைகளை, சிங்கள மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதனாலையே “இப்படி ஒரு காலம்” எனும் நூலினை “மதக வன்னிய” என சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்து அதனை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க விரும்பினேன் என நூலின் மொழி பெயர்ப்பாளர் அனுஷா சிவலிங்கம் தெரிவித்து உள்ளார்.
கவிஞரும் எழுத்தாளருமான சிவராசா கருணாகரனின் “இப்படி ஒரு காலம் ” எனும் நூல் சிங்கள மொழியில் “மதக வன்னிய ” எனும் பெயரில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது.
எழுத்தாளரான சிவராசா கருணாகரனின் “இப்படி ஒரு காலம்” எனும் நூல் கிளிநொச்சி நகரின் தோற்றமும், அதன் அழிவுகளும், போரின் வலிகளையும், அந்த நாட்களின் அழிவுச் சுவடுகளையும், செம்மணி, ஆனையிறவு, இயக்கச்சி, விசுவமடு, கிளாலி, அக்கராயன், கண்டாவளை போன்ற இடங்களின் போராட்டகால நிகழ்வுகளும் , வாழ்க்கையும் எனப் பலவற்றை எடுத்து சொல்லும் இந்நூல் 2014 இல் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நூலினை கொழும்பு பல்கலைகழக ஊடக கற்கை நெறி மாணவியான அனுஷா சிவலிங்கம் சிங்கள மொழியில் மொழிபெயர்த்து உள்ளார். அந்நூலின் முதலாம் பதிப்பு வெளியாகி ஓரிரு மாதங்களில் நூல்கள் விற்று தீர்ந்த நிலையில் அதன் இரண்டாம் பதிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
கொழும்பு தேசிய நூலகத்தில் கடந்த 11ம் திகதி மாலை குறித்த நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்வில் புத்தகத்தின் ஆசிரியரான சிவராசா கருணாகரன் , அந்நூலினை சிங்களத்தில் மொழி பெயர்த்த அனுஷா சிவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள், அவலங்களை சிங்கள மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
அந்நிகழ்வில் நூலினை மொழி பெயர்த்த அனுஷா சிவலிங்கம் தெரிவிக்கையில் ,
தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள், அவலங்களை சிங்கள மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். தெரிந்துகொள்ள வேண்டும். எனும் நோக்குடனையே இந்த நூலினை மொழி பெயர்ப்பு செய்தேன்.
முதல் பதிப்பு வெளியாகி, ஓரிரு மாதங்களில் அந்த நூல்கள் விற்று தீர்ந்து விட்டன. தற்போது இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளன. இந்த நூலினை வரவேற்று, வாசித்தவர்களுக்கு நான் நன்றி சொல்ல மாட்டேன். ஏனெனில் தமிழர்களின் பிரச்சனைகளை, சிங்கள மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவர்களின் பொறுப்பு.
அதேவேளை மூச்சு வாங்கும் எழுத்துக்கள் உள்ளடங்கிய இந்த நூலுக்கு உயிர் கொடுத்தது யாழ்.பல்கலைகழக மொழியியற் கற்கை பிரிவின் விரிவுரையாளர் விமல் சுவாமிநாதன். சிங்கள மக்கள் மத்தியில் இந்த நூலினை கொண்டு சேர்க்க வேண்டும் என கூறியவரும் அவரே. எனவே , அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டு உள்ளேன். என தெரிவித்தார்.
நான் இறுதி யுத்தத்தின் சாட்சி.
அதேவேளை எழுத்தாளர் சிவராசா கருணாகரன் தெரிவிக்கையில் ,
நான் இறுதி யுத்தத்தின் சாட்சியாக இருக்கின்றேன். நாங்கள் பொருத்தமில்லாத தலைவர்களால் ஆட்சி செய்யப்பட்டு உள்ளோம்.
ஒருவரை ஒருவர் அன்பு செலுத்தாமல் கொல்லப்பட்டிருக்கிறோம். இந்த தலைமுறை யுத்தம் எமக்கு ஒரு பாடம். இது இத்தோடு முடியட்டும். ஜப்பானை சிதைத் அமெரிக்காவோடு யப்பான் இன்று நட்பாக உள்ளது. ஏன் எங்களால் முடியாது. உலகெங்கும் யுத்தம் வேண்டாம் என மன்றாடுகிறேன். அரசியல்வாதிகள் இன்றும் எமக்கு நம்பிக்கையானவர்களாக இல்லை . ஊடகவியலாளர்கள் தான் இதனை மாற்றவேண்டும். ஊடகவியலாளர்களே சமாதானத்திற்காகாக போராட வேண்டும் படைப்பாளியின் குரலாக நான் இதை முன்வைக்கிறேன். என தெரிவித்தார்.
Spread the love