குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சியில் இன்று செவ்வாய் கிழமை 17-01-2016 விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது. தற்போது நாட்டில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக எதிர்வரும் மாதங்களில் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிா்கொள்ளவேண்டிய சூழல் ஏற்படும் என்பதனால் வரும் இருப்பதாம் திகதி முன்னா் ஜனாதிபதி செயலகத்தினால் வறட்சியினால் ஏற்படும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் அதனை எதிா்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடா்பில் அறிக்கை ஒன்றை அனுப்புவதற்காகவும் விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சரும், பதில் முதலமைச்சருமான பொ.ஜங்கரநேசன் பாராளுமன்ற உறுப்பினா்களான சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.
தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் மாவட்டத்தின் பல ஆயிரக்கணக்கான ஏக்கா் வயல்கள் அழிவடைந்துள்ள நிலையில் எஞ்சிய வயல்களை எவ்வாறு பாதுகாப்பது, வரட்சியினால் வரும் மாதங்களில் மக்கள் எதிர்கொள்ளவுள்ள உணவு தட்டுப்பாடு, தொழிலின்மை, சுகாதார பிரச்சினைகள், குடிநீா் பிரச்சினை, மின்சாரம்,நன்னீர் மீன் பிடி பாதிப்பு, போன்ற விடயங்கள் தொடா்பிலும், கால்நடைகள் மற்றும் வனவிலங்களுக்கான குடி நீா் ஏற்பாடுகள் தொடர்பிலும் விசேடமாக ஆராயப்பட்டது.
மேலும் மேற்படி பிரச்சினைகள் எதிர்கொள்கின்ற சந்தர்ப்பங்களில் அதற்கான மாற்று நடவடிக்கைகள் பற்றியும் அதனை எந்ததெந்த நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் இன்றைய விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண சபை உறுப்பினா்களான தவநாதன், பசுபதிபிள்ளை. மாவட்ட மேலதிக அரச அதிபா் சத்தியசீலன்,பிரதேச செயலாளா்கள், திணைக்களங்களின் தலைவா்கள் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலா் கலந்துகொண்டனா்