குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலான சர்ச்சைகள் நீடித்து வருகின்றன. அரசாங்கம் பெரும் பிரச்சாரத்துடன் ஆரம்பிக்கும் அநேகமான அபிவிருத்தித் திட்டங்கள் சர்ச்சைக்குரிய வகையிலேயே அமைந்துவிடுகின்றது.
அந்த வகையில் அண்மையில் மிகப் பிரமாண்டமான முறையில் அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட ஹொரணை டயர் உற்பத்திசாலை தொடர்பிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஹொரணை டயர் உற்பத்திச்சாலை நிர்மானப் பணிகளை தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இந்த உற்பத்திசாலைக்கான காணி பெற்றுக் கொண்ட விதம் மற்றும் சில சலுகைகள் வழங்கப்பட்ட விதம் தொடர்பில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் சுவிட்சர்லாந்து பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பும் வரையில் இந்த அபிவிருத்தித்திட்டத்தை இடைநிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கைத்தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு வைபவம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.