ஜீஎஸ்பி பிளஸ் சலுகையை வழங்குவதற்காக நாட்டின் கலாசாரம் மற்றும் தனித்துவ பண்பாட்டுக்கு முரணாண நிபந்தனைகளை முன்வைக்க வேண்டாமெனவும் இவ்வாறான நிபந்தனைகள் நாட்டில் மேலும் பல புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்கவே வழிவகுக்கும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் வெளிவிகாரங்கள் தொடர்பான துணை தலைமைப் பொறுப்பாளர் (dietmar krissler) டீட்மர் கிறிஸ்லலருடன் இன்று கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை பல்வகையின மத கலாசாரங்களை பின்பற்றுபவர்களை கொண்ட நாடு எனவும் எனவே மத மற்றும் கலாசார ரீதியான நிபந்தனைகளை முன்வைப்பதன் மூலம் நாட்டில் மேலும் குழப்பங்களே ஏற்படும் எனவும் எனவே இவற்றை கருத்திற் கொண்டு நிபந்தனைகள் இன்றி ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வரவேண்டும் எனவும் ஹாபிஸ் நசீர் அஹமட் கேட்டுக் கொண்டார்.
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவியளிக்க வேண்டும் எனவும் இதன் மூலம் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் ஜிஎஸ்பி பிளஸ் வழங்கும் போது கிழக்கில் தற்போது காணப்படும் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் முகமான தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் முன்வர வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.