ஜல்லிக்கட்டு நடப்பதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி நாளை காலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யைச் சந்தித்துப் பேசப் போவதாக தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு இந்திய உச்ச நீதிமன்றம் நிரந்தரத் தடைவிதித்திருக்கும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்துவருகின்றன.
இந்த நிலையில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமானால், உச்ச நீதிமன்றத்தில் அதற்கு சாதகமான தீர்ப்பு வர வேண்டும் என்றும் அதற்கு முன்பாக ஜல்லிக்கட்டை நடத்த வேண்டுமென்றால் மத்திய அரசுதான் அவசரச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் இதனால், போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டங்களைக் கைவிட வேண்டுமெனவும் கோரியிருக்கிறார். எனினும் போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்துள்ளனர்.
இதேவேளை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திவரும் இளைஞர்கள் மீது போலீசார் திடீர் தடியடி நடத்தியதாகவும் இதனால் சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமைதியாக அறவழியில் சென்று கொண்டிருந்த போராட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு திடீரென போலீசார் அதிகளவு குவிக்கப்பட்டதாகவும் வீதியில் கூடியிருந்தவர்கள் மீது லத்தியால் போலீசார் லேசான தடியடி நடத்தியதாகவும் இதில் காவலர் மற்றும் போராட்டக்காரர்கள் சிலர் காயம் அடைந்துள்ளனர் எனவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.