குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் வடக்கும் தெற்கும் அச்சமடைந்துள்ளதாக சிரேஸ்ட பேராசிரியர் தம்மர அமில தேரர் தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சி உருவாக்கப்படும் என வடக்கும், சமஸ்டி ஆட்சி உருவாக்கப்பட்டுவிடும் என தெற்கும் பீதி கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் அரசியல் சாசனம் அமைக்கும் பணிகளில் அனைத்து தரப்பினரதும் கருத்துக்கள் கேட்டறிந்து கொள்ளப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு அன்றி தனியான நோக்கங்களின் அடிப்படையில் அரசியல் சாசனமொன்றை அமைக்க முயற்சிப்பது தோல்வியை ஏற்படுத்தும் எனவும் புதிதாக அரசியல் சாசனம் அமைக்கும் போது அணுவளவேனும் பிழை ஏறபட்டால் அது மீளவும் யுத்தம் ஏற்படக்கூடிய அபாயத்தை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு தேசிய நூலகச கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனம் தேவையில்லை எனவும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமெனவும் சிலர் கோரி வருகின்ற போதிலும், அரசியல் சாசனம் தற்காலிக அடிப்படையில் தீர்க்கப்படக் கூடாது எனவும் தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.