யாழ்ப்பாண – நெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்து சேவைக்காக புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தாரகை பயணிகள் படகு சேவை இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை புங்குடுதீவு-குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவுக்கான வெள்ளோட்டத்தை ஆரம்பித்துள்ளது.
சுமார் 250 பயணிகள் பயணிக்க கூடிய இந்த பயணிகள் படகு உலகவங்கியின் நெல்சிப் திட்டத்தின் கீழ் மாகாண, மத்திய உள்ளூராட்சி அமைச்சுக்கள் மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கம் ஆகியன இணைந்து மேற்கொண்டிருந்தன.
இலங்கை நெடுந்தாரகை பயணிகள் படகினை டொக்கியாட் நிறுவனம் மூலம் சுமார் 150 மில்லியன் ரூபா செலவில் தயாரித்துள்ளது.
இந்த ஆரம்ப நிகழ்வில் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹச்சீசன் ஆகியோருடன் மாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.