ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று பிறப்பித்துள்ளார். எனினும் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர் அனைவரும் இந்த அவசர சட்டத்தை நிராகரித்துள்ளனர்.
தங்களுக்கு நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடப்பதற்கான சட்டமே தேவை என பொதுமக்கள் ஒரே குரலில் தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
70-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என அவசர சட்டம் தெரிவிக்கின்றது எனவும் இந்த அவசர சட்டத்தை ஏற்கவே முடியாது எனவும் தங்களுக்கு நிரந்தர சட்டதே தேவை எனவும் அலங்காநல்லூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவசர சட்டம் 6 மாதத்துக்கு மட்டும்தான் செல்லுபடியாகும்; என்பதனால் ஒவ்வொரு முறையும் வீதிக்கும் நீதிமன்றத்துக்கும் தங்களால் செல்ல முடியாது எனவும் தெரிவித்த அவர்கள் ; நிரந்தரமாக எந்த தடையும் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதே தமது கோரிக்கை எனவும் தெரிவித்துள்ளனர்.
மிருகவதை என்ற பெயரில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததனைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகாலமாக தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.