நாளை (ஜனவரி 23-ஆம் தேதி) ஜல்லிக்கட்டு நடத்த பிறப்பித்த அவரசச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து தமிழக சட்டமன்றத்தில் முன்வடிவு வரைவு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கிட அலங்காநல்லூர் சென்று திரும்பிய தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளாளர்களிடம் கூறுகையில், ”தற்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம், நிலையான ஒன்று” என்று கூறினார்.
”பெரும் முயற்சியால், தமிழகத்தில் வாடிவாசல் திறக்கப்பட்டுள்ளது. சில இடங்களில், தவிர்க்க முடியாத காரணங்களால், ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் விரும்பும் போது விரைவில், அங்கே ஜல்லிக்கட்டு நடைபெறும்” என்று பன்னீர்செல்வம் கூறினார்.
மேலும், நாளை கூடும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில், ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்தின் முன்வரைவு தாக்கல் செய்யப்படும். இதன் பின்னர், அதனை நிரந்தர சட்டமாக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு இன்று திட்டமிட்டபடி நடக்காதது குறித்து பேசிய முதல்வர் பன்னீர்செல்வம் ”அலங்காநல்லுாரில் மக்கள் விரும்பும் போது ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும். ஜல்லிக்கட்டை இனி யாராலும் தடுக்க முடியாது. அப்படி நடத்தப்படும் நேரத்தில் அரசு சார்பாக எல்லா வசதிகளும், பாதுகாப்பும் வழக்கம் போல அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, இன்று காலை 10 மணி அளவில் அலங்காநல்லூரில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதாக இருந்தது.
ஆனால், மதுரை நகரில் இருந்து அலங்காநல்லூர் செல்லும் சாலையில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை ஏற்படுத்தியதால், வாகனகங்கள் எதுவும் அச்சாலையில் செல்ல முடியவில்லை.
அலங்காநல்லூர் மக்களும், அங்கு குழுமியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை, தற்போது கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டம் போதாது என்றும், இதற்கு நிரந்தர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கவில்லை. அங்கு காளைகள் கொண்டு வரப்படவில்லை.
இதனால், தனது அலங்காநல்லூர் பயணத்தை ரத்து செய்து விட்டு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
BBC