யாழ். நாவற்குழியில் சிங்கள மக்களுக்கு காணிகள் வழங்குவதற்கு கடந்த வார ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. எனினும் எதிர்ப்புகளையும் மீறி இந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் 250 சிங்கள குடும்பங்களுக்கு மானிய அடிப்படையில் வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான அடிக்கல், இம்மாதம் 30ஆம் திகதி வீடமைப்பு அமைச்சால் நாட்டப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன. இந்த வீட்டுத்திட்டத்திற்கென இதுவரை 220 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கான வங்கிக் கணக்குகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வீடுகளுக்கான அத்திவாரங்களும் மிக துரதமாக வெட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் யாழ். குடாநாட்டிற்கு சென்று, சில நாட்களின் பின்னர் நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் அனுமதியின்றி குடிசைகள் அமைத்துத் தங்கியவர்களுக்கே எதிர்ப்பையும் மீறி இவ்வாறு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.