குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கம் நீதிமன்றின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 7ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச, பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. அரச வாகனங்களை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் விம்ல் வீரவன்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கத் தரப்பினர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை அரசாங்கம் வேட்டையாடி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரச வாகனங்களை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தற்போதைய ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஒடுக்குவதற்கு நீதிமன்றங்களையும், நீதித்துறைச் சார்ந்த அதிகாரிகளையும் அரசாங்கம் அழுத்தங்களுக்கு உட்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் அரசாங்கம் கவிழ்க்கப்படும் வரையில் தமது போராட்டம் கைவிடப்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.