குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும், ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைக்கும் எதிரான, கறுப்பு ஜனவரி நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தபால் அட்டைகள் அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பு மன்றத்தில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வினை இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது, படுகொலை செய்யப்பட்ட கடத்தப்பட்ட ஊடகவியலாள்களின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், அவர்களின் மரணத்திற்கு அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பங்கேற்று தமது எதிர்ப்பினைத் தெரிவித்ததுடன், ஜனாதிபதிக்கான தபால் அட்டைகளையும் அனுப்பி வைத்தனர்.
ஊடக அடக்குமுறைக்கு எதிரான கறுப்பு ஜனவரி தினம் ஊடக அமைப்புக்களினால் வருடம்தோறும் ஜனவரி மாதம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.