கடத்தப்பட்டும், கைதுசெய்யப்பட்டும், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டும், காணாமல் போன தமது உறவுகளின் நிலை குறித்து அறிவிக்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொட்டும் மழையில், குளிருக்கு மத்தியில் உணவை தவிர்த்து இரவு பகலாய் தமது உறவுகளுக்காய் இம்மக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலுள்ள இளைஞர்கள் இன்று முற்பகல் போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு இரவில் மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டும், குறித்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்டவில்லை. இதனால் குப்பி விளக்கின் வெளிச்சத்திலேயே இரவிலும் போராட்டத்தை தொடர்கின்றனர்.
இவற்றிற்கிடையே புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலும் தொடர்வதோடு, உண்ணாவிரதம் மேற்கொள்பவர்கள் தொடர்பான விபரங்களை நேற்று மாலை பொலிஸார் சேகரித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் நிறைவடைந்து 8 வருடங்களாகியும் தமது உறவுகளின் நிலை குறித்த உண்மையை அரசாங்கம் வெளியிடாததால், ஏற்கனவே பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் மனுக்களை கையளித்தும் எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில், வேறு வழியின்றி இந்த மக்கள் தற்போது சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை கையிலெடுத்துள்ளனதாக தெரிவிக்கப்படுகிறது.