குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கள்வர்களை தாம் ஒரு போதும் காப்பாற்றப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி அபயாராமயவில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய எவரும் தப்பிக்க முடியாது எனவும் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் நோக்கில் ஜனாதிபதி விசாரணைக் குழுவினை நிறுவவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணைக்குழுவின் ஊடாக இந்த மோசடி குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அதன் பின்னர், கடந்த பத்து ஆண்டுகளில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல் கொடுத்தே தாம் மஹிந்த அரசாங்கத்தை விட்டு வெளியேறியதாகவும், அந்த நிலையில் தமது அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி கள்வர்கள் என்றால் அனைவரும் கள்வர்கள் எனவும், எவரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் தமக்கு கிடையாது எனவும் எந்தவிதமான சர்வதேச அழுத்தங்களுக்கும் தாம் அடி பணிந்து செயற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.