175
ஈழத்தை இன்றுவரை வாட்டிக்கொண்டிருக்கிற விடயம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் கண்ணீர். தீர்வு கிடைக்கும் வரை வாட்டுகிற விடயமாகவே இது இருக்கும். போர் முடிந்து எட்டு ஆண்டுகளை அண்மிக்கும் காலத்திலும் இறுதிப் போர்க்காலத்திலும் அதற்கு முன்பாகவும் காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் என்று பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் கதி என்னவென்று அறிய முடியாமல் இருக்கிறது.
மிக மர்மமும் மிகக் கொடூரமான மனித உரிமை சார்ந்த விடயமாகவும் இன ஒடுக்குமுறையின் பாற்பட்ட விடயமாகவும் இன அழிப்பின் பாற்பட்ட விடயமாகவும் இவ் விடயம் இருக்கிறது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. அதன் பின்னர் சிங்கள அரசியலில் பல்வேறு விடயங்கள் அம்பலமாகின. குற்றவாளிகள் விசாரணை செய்யப்படுகின்றனர். ஆனால் ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ந்த பின்னரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து இலங்கை அரசு மர்மத்தை தொடர்ந்தும் பாதுகாத்து வருகிறது.
காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் பற்றிய விபரங்களை மகிந்த அரசு எவ்வாறு இரகசியம் காத்து வந்ததோ அவ்வாறே இன்றைய மைத்திரி ரணில் அரசும் ரகசியம் காத்து வருகிறது. உண்மையில் ஆட்சி மாற்றம் என்பது சிங்களவர்களுக்கு மாத்திரமே, தமிழர்களுக்கு அல்ல என்பதையும் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதிகள் விடயத்தில் கடந்த கால ஆட்சியாளர்களை காட்டிக் கொடுக்க மாட்டோம் என்றும் அவர்கள் இழைத்த குற்றங்களில் எமக்கும் அரசு என்ற வகையில் பங்கிருக்கிறது என்று இலங்கை அரசு கருதுகிறதா?
கடந்த சில நாட்களாக வவுனியாவில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு சாகும்வரையிலான உண்ணாதவிரதப் போராட்டம் ஒன்று நடைபெறுகிறது. அதற்கு ஆதரவாக யாழிலும் கிளிநொச்சியிலும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன. இந்தப் போராட்டத்தை குறித்து, நம்முடைய கரிசனை என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. ஜல்லிக் கட்டுப் போராட்டத்திற்கு ஏற்பட்ட சமூக வலைத்தள ஆதரவு இந்தப் போராட்டத்திற்கு இல்லை என்பதே பலரின் குற்றச்சாட்டு.
இலங்கை அரசு மாத்திரமல்ல, நாமே இந்த மக்களை கண்டுகொள்ளாதிருக்கிறோம். இலங்கை அரசு மாத்திரமல்ல, நாமே இந்த மக்களை கைவிட்டு இருக்கிறோம். இதுதான் பெரும் துயரமும் இலங்கை அரசின் வெற்றியும். உண்மையில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் பிரச்சினை உள்ளடங்கலாக இனப்படுகொலை குறித்த பிரச்சினையில் காலத்தை தாழ்த்தி, இழுத்தடித்து, நீதியான சர்வதேச விசாரணைக்கு எதிராக காய்களை நகர்த்தி எங்கள் பிரச்சினைகளை நீர்த்துப் போகச் செய்வதே இலங்கை அரசின் நோக்கம். அச் செயற்பாடுகளின் பெறுபேறே இது.
இன்றைக்கு அந்தத் தாய்மார்கள் பசியில் துவண்டு போய் உள்ளனர். தீராத புத்திரப் பசி. புத்திரர்களுக்காக சிந்தும் கண்ணீர். வலிய கண்ணீர். ஆட்சியாளர்களை பழி வாங்கும் கண்ணீர். குற்றங்களை புரிந்தவர்களை பழிவாங்கும் கண்ணீர். இந்தக் குற்றங்களை நேரடியாக வழி நடத்தியவர்கள் இன்றைக்கு நெருக்கடியில் அனுபவிக்கின்றனர். இதனையே இன்றைய ஆட்சியாளர்களும் செய்தால் அவர்களும் இப்படி துன்பத்தில் தள்ளப்படுவார்கள். ஆனால் இன்றைய ஆட்சியாளர்களின் பதிலுக்கும் அன்றைய ஆட்சியாளர்களின் பதிலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
காணாமல் போனவர்கள் என்றால் அவர்கள் இல்லை என்று அரத்தம் என்றார் முன்னர் பசில் ராஜபக்ச. காணாமல் போனவர்கள் வெளிநாடுகளில் என்றார் கோத்தபாய ராஜபக்ச. இன்றைய பிரதமர் ரணிலோ, காணாமல் போனவர்கள் என்றால் உயிருடன் இல்லாதவர்கள், வெளிநாடுகளில் உள்ளவர்கள் என்கிறார். அன்றைய பசிலினதும், கோத்தாவினதும் குரல்களை இன்றைய பிரதமர் ஒற்றைக் குரலில் சொல்கிறார். இதுதான் ஆட்சி மாற்றம். இதுதான் நல்லிணக்க முயற்சி.
காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருகிறோம், எங்கள் அலுவலகம் வந்து பெயர் விபரங்களை பதியுங்கள், அத்துடன் இந்த சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று மகிந்த அரசு சுயேட்சை கட்சி ஒன்றை 2010 இல் இறக்கியது. காணாமல் போகச் செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்த யுத்தத்தை நடத்து என்று அன்று அரசுக்கு ஆணையிட்ட ஜே.வி.பி காணாமல் போனவர்களுக்காக நீலிக் கண்ணீர் விட்டு போராட்டம் ஒன்றை நடத்தியது. எல்லாம் கட்சியினதும் அமைப்பினதும் நலம் சார்ந்துதான் அமைந்தன. இதனை ஒட்டுமொத்த இனம் தழுவிய ரீதியாக தாயகம் தழுவிய ரீதியாக செய்வதுதான் அழுத்தம் தரவல்லது.
காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்காக உண்ணா விரதம் இருக்கும் தாய்மாரை பாதுகாக்குமாறு வடக்கு முதல்வர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். காணாமல் போன உறவுகளின் நிலையை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே போரட்டம் நடத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட சிறுமி ஒருவர் பற்றிய தகவல்களைக் கோரி அவரது தயார் போராடி வருவதாகவும் குறைந்தபட்சம் இந்தக் கோரிக்கைக்கேனும் முதலில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வடக்கு முதலமைச்சர் மைத்திரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இலங்கை அரசால் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கான நீதியை, அவர்கள் பற்றிய விபரங்களை இலங்கை அரசு வெளியிட வேண்டும். உண்மையை இலங்கை அரசு வாயை திறந்து பேச வேண்டும். மௌனமாகவும் மயக்கமாகவும் பேசி ஈழத் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை மறைக்கும் இன்றைய அரசை, அதன் கொடிய முகத்தை எதிர்த்து, அதை உலகிற்கு அம்பலப்படுத்த தமிழ் தலைமைகள் முன்வரவேண்டும். இந்தப் போராட்டத்தின் இன்றைய நிலை, ஒட்டுமொத்த ஈழத்தின் நிலையை தெளிவாக எடுத்துரைக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் மாத்திரமல்ல எல்லா விடயத்திலும் இலங்கை அரசின் செயற்பாடு இப்படித்தான் உள்ளது.
வவுனியாவில் தொடங்கிய இப் போராட்டத்தை, சர்வதேச அளவில் விரிவுபடுத்துவதன் மூலமே இலங்கை அரசின் முகத்தை அம்பலம் செய்ய இயலும். அத்துடன் இனப்படுகொலை விடயத்தில் சர்வதேச விசாரணை வலியுறுத்துவதோடு, இலங்கை அரசால் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் குறித்தும் சர்வதேச விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும். இலங்கை அரசு மென்று விழுங்கும் உண்மைகளை அம்பலப்படுத்த வேண்டும். அதன் ஊடாக ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும். இதனை விரைந்தும், தீர்க்கமாகவும் வலியுறுத்துவதும் செயற்படுவதும் இன்றைய காலத்தின் அவசியம் ஆகும்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
Spread the love