247
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இன முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமான செய்தி ஒன்றின் உண்மை தன்மையை அறியும் நோக்குடன் சில ஊடகவியலாளர்கள் , யாழ்.மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரை சந்திக்க சென்ற வேளை , தன்னை இப்பொழுது சந்திக்க முடியாது சனிக்கிழமை வந்து சந்தியுங்கள் என கூறி ஊடகவியலாளர்களை சந்திக்காது சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் திருப்பி அனுப்பியுள்ளார்.
ஊர்காவற்துறை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு இருந்தார்.
அக் கொலை சம்பவத்துடன் முஸ்லீம் இளைஞர் ஒருவருக்கு தொடர்பு உண்டு எனவும் , அந்நபரை காவல்துறை தேடி வருவதாகவும் , அவரை பற்றிய தகவல் அறிந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையங்களுக்கு அறிவுக்குமாறு கூறி குறித்த நபரின் புகைப்படத்துடன் செய்தி யாழில் உள்ள பல ஊடகவியலாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு உள்ளது.
அந்த செய்தி பல இணையத்தளங்களிலும் வெளியாகி உள்ளன. அந்த செய்தியின் உண்மை தன்மையை அறியும் நோக்குடன் சில ஊடகவியலாளர்கள் வியாழக்கிழமை இரவு 9.15 மணியளவில் யாழ்.மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு சென்று இருந்தனர்.
அதன் போது அலுவலக காவல் கடமையில் நின்றவரிடம் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரை சந்திக்க அனுமதி கோரிய போது , அவருடன் தொலைபேசியில் கதைத்து அனுமதி பெறுமாறு ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்து இருந்தார்.
அதனை அடுத்து ஊடகவியலாளர் ஒருவர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தன்னை சந்திக்க முடியாது எனவும் சனிக்கிழமை வந்து சந்திக்குமாறும் கூறினார்.
அதற்கு குறித்த ஊடகவியலாளர் அந்த செய்தியின் முக்கியத்துவத்தை கூறி , இந்த செய்தி இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் செய்தி எனவே உடனடியாக அந்த செய்தியின் உண்மை தன்மையை காவல்துறை தரப்பினர் வெளியிட வேண்டும் என கோரிய போதிலும் , அவர் அதற்கு பதில் அளிக்காமல் தன்னை சனிக்கிழமை வந்து சந்திக்குமாறு தொலைபேசியில் பதில் அளித்து விட்டு , தொலைபேசியினை துண்டித்து விட்டார். இதனால் அந்த செய்தியின் உண்மைத்தன்மையை அறிய முடியாது உள்ளது.
இதேவேளை சம்பவம் நடந்த தினத்தன்றும் இந்த படுகொலையை செய்தது முஸ்லீம் இளைஞர்கள் தான் என பல இணையத்தளங்களில் செய்தி வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது
Spread the love