குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி அபயாராமயவில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நுகேகொடையில் நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் மாபெரும் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்கின்றார்களா என கண்டறியும் நோக்கில் இவ்வாறு கண்காணிக்கப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இவ்வாறு கண்காணிக்கப்படுகின்றார்கள் எனவும் இந்தக் கூட்டம் தொடர்பில் அரசாங்கம் பெரும் பீதியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் ஆளும் கட்சியின் உறுப்பினர்களே தமக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக கூறி வருவதாகவும்; தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமா அல்லது நுகேகொடை கூட்டமாக பலம்பொருந்தியது என்பதனை பொறுத்திருந்து பார்த்தால் புரிந்து கொள்ள முடியும் எனவும் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொண்ட உடனேயே அர்ஜூன் அலோசியஸை கைது செய்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ள மகிந்த நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை விடவும் நிதி அமைச்சர் பலம்பொருந்தியவராக காணப்படுகின்றார் என தெரிவித்துள்ளார்.