குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத நிலைமை இலங்கையில் தொடர்ந்தும் நீடித்து வருவதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் தலைவி யாஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார். இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையானது அரசாங்கத்திற்கான ஓர் விழிப்புணர்வு கோரிக்கையாகவே கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் சர்வதேச தரநிர்ணயங்களை பின்பற்றி சித்திரவதைகளுக்கு எதிராக செயற்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பயணத்தை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் விசேட பிரதிநிதி ஜூவான் மென்டாஸ், இந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
சித்திரவதைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளதாகவும் இது சரியானதே எனவும் சூகா சுட்டிக்காட்டியுள்ளார்.
விசாரணை பொறிமுறைமைக்கு உதவிகளை வழங்குவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஆகியனவற்றுக்கு அறிவித்த போதிலும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015 மற்றும் 2016ம் ஆண்டுகளிலும் வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. குற்றச்செயல்கள் தொடர்பிலான சாட்சியங்களை ஏற்றுக் கொள்வதற்கு விரும்பாத நிலைமை நீடித்து வருவதாக சூகா குற்றம் சுமத்தியுள்ளார்.
பாதுகாப்பு தரப்பில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் ரீதியான காரணங்களினால் கடத்தல்கள் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் சாட்சியங்கள் உரிய முறையில் திரட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிப் பொறிமுறைமையை மாற்றியமைப்பது குறித்து திட்டமிட்ட மாற்றங்கள் எதனையும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் மேற்கொள்ளத் தவறியுள்ளதாகக் சூகா சுட்டிக்காட்டியுள்ளார்.