அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நேர்மையாக நிறைவேற்றப்படாவிடின், அது நாட்டில் எதிர்பாராத நிலைமைகளை தோற்றுவிக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மறைந்த சபாநாயகரும், அமைச்சருமான எச்.எம்.மொஹமட்டின் அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சகல இனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு நியாயமான தீர்வொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்பதுடன் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என எச்.எம்.மொஹமட் தீவிரமாக விரும்பியிருந்தார் என்பதனை சுட்டிக்காட்டிய சம்பந்தன் எனினும், அன்று அவருடன் நெருக்கமாகவிருந்த அரச தலைவர்கள், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த நிலைமை இன்னமும் தொடர்ந்த வண்ணமே உள்ளது எனவும் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாவிட்டால் தவிர்க்க முடியாத சூழல் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.