156
வடகிழக்கு இணைந்தால் தாம் சிறுபான்மையாகி விடுவோமென்ற சந்தேகம் முஸ்லீம் மக்களிடம் உண்டு. எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பு கிழக்கிலுள்ள முஸ்லீம் சிவில் சமூகத்திடம் தமிழ் தரப்பினால் முஸ்லீம்களிற்கு தீர்வாக என்னத்தை வழங்கமுடியுமென்பதை தெளிவுபடுத்த வேண்டும். என காத்தான்குடி முஸ்லீம் போரத்தின் பிரதிநிதிகள் தெரிவித்து உள்ளனர்.
வடமாகாணத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு உள்ள காத்தான்குடி முஸ்லீம் போரத்தினை சேர்ந்தவர்கள் வடக்கில் பல்வேறு இடங்களுக்கும் சென்றும் பல தரப்பினர்களை சந்தித்து தற்கால தமிழ் முஸ்லீம் மக்களுக்கு இடையிலான புரிந்துணர்வு தொடர்பில் கலந்துரையாடி வருகின்றனர்.
அந் நிலையில் சனிக்கிழமை மாலை யாழ்.ஊடக அமையத்திற்கு சென்று ஊடக அமையத்தினருடன் தற்கால நிலைமை தொடர்பில் கலந்துரையாடினர். அதன் போதே காத்தான்குடி முஸ்லீம் போரத்தினர் மேற்குறித்த கருத்தினை முன் வைத்து இருந்தனர்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கினை இணைப்பது தொடர்பினில் முஸ்லீம் சமூகத்திடம் சந்தேகமும் அச்சமும் உள்ளது.வடகிழக்கு இணைந்தால் தாம் சிறுபான்மையாகிவிடுவோமென்ற சந்தேகமும் அவர்களிடமுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு கிழக்கிலுள்ள முஸ்லீம் சிவில் சமூகத்திடம் தமிழ் தரப்பினால் முஸ்லீம்களிற்கு தீர்வாக என்னத்தை வழங்கமுடியுமென்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
அரசியல் தரப்பிடம் இல்லாவிடினும் சிவில் சமூகத்தை தெளிவுபடுத்தினால் மட்டுமே முஸ்லீம் மக்களது சந்தேகத்தை நீக்கமுடியும்.ஆனால் அது தொடர்பினில் ஒரு சதமேனும் கூட்டமைப்போ அதன் தலைமையோ நடவடிக்கை எடுக்காது வெறுமனே பத்திரிகை அறிக்கைகளை விடுத்துக்கொண்டிருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
தமிழ் மக்கள் பேரவை கூட எழுக தமிழிற்கு ஆட்சேர்க்கத்தான் கூட்டங்களை நடத்துகின்றது.தமிழ் மக்கள் பேரவையிடம் கூட முஸ்லீம் சிவில் சமூகத்திற்கு வழங்க கூடிய பதில் நம்பிக்கை தரக்கூடியதாக இல்லை.
வடகிழக்கினில் தமிழ் மக்களும் முஸ்லீம்களும் புட்டுக்கு தேங்காய்பூ போலவே வாழ்கின்றனர்.வடக்குடன் ஒப்பிடுகையினில் கிழக்கினில் நம்பிக்கையீனம் அதிகமாகவுள்ளது.அதனை போக்கினால் மட்டுமே வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி கிழக்கினில் ஆதரவை பெறலாமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
Spread the love