குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையக் கூடிய சாத்தியம் உருவாகியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் படுகொலை முயற்சி குறித்த தகவல்களின் மூலம், தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்களா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ள அவர் இந்த படுகொலை சதித் திட்டத்திற்கான முழுப் பொறுப்பினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே பிரிவினைவாதத்தை போஷித்தனர் எனவும் சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்தமை குறித்த தகவல்களின் மூலம், நாட்டின் தேசியப் பாதுகாப்பு குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும், எந்தவொரு காரணத்திற்காகவும் பாதுகாப்பு விவகாரங்களில் அரசாங்கம் விட்டுக் கொடுப்புக்களை செய்யக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.