ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கையை, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நிராகரித்துள்ளார். திவுலப்பிட்டிய பிரதேச செயலாளரிடம் மன்னிப்பு கோருமாறு ஜனாதிபதி தொலைபேசி மூலம் அறிவுறுத்தியதாகவும் தாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ள அவர், மக்களின் கிணறுகளில் உள்ள நீர் வற்றிப் போகும் வகையில் மண் வெட்டுவதற்கு அனுமதயளித்த அரசாங்க அதிகாரி ஒருவரிடம் தம்மால் மன்னிப்பு கோர முடியாது என தாம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதேச செயலாளரைப் போன்று தாமும் மக்களின் பணத்தைக் கொண்டு கொடுப்பனவு பெற்றுக் கொள்வதாகவும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டியது அனைவரினதும் கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத மண் அகழ்வினால் பாரியளவில் இயற்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், வில்பத்து வனப் பிரதேசத்தில் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தவறிழைத்துள்ளார். சிங்கள மக்களுக்கு ஒரு விதமாகவும், முஸ்லிம் மக்களுக்கு ஒரு விதமாகவும் சலுகை வழங்கப்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை அர்ஜூன் மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ் ஆகியோர் பாரியளவில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தவறிழைத்தவர்கைள சுட்டிக்காட்டுவதற்கு தாம் ஒரு போதும் பின்னிற்கப் போவதில்லை எனவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.