பாராளுமன்றத்தில் இன்று 2017-18 நிதியாண்டுக்கான பொது வரவுசெலவுத்திட்டத்தை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
முதல் முறையாக பொது வரவு செலவுத்திட்டத்துடன் புகையிரத வரவு செலவுத்திட்டத்தையும் சேர்த்து இன்று காலை 11 மணிக்கு தனது வரவு செலவுத்திட்டத்தை உரையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தொடங்கினார்.
தனது வரவுசெலவுத்திட்ட உரையை தொடங்கி அருண் ஜேட்லி உரையாற்றுகையில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை அதிகரிக்க இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது எனவும் மேலும், நாட்டை சீரழித்து வந்த கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியில் அரசு மிகவும் உறுதியாக உள்ளது எனவும்தெரிவித்தார்.
அவர் தனது உரையில் விவசாயிகளுக்கு 60 நாட்கள் வட்டி தள்ளுபடி தொடரும் எனவும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு 13 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்படும் எனவும,; அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் 2019 ஆம் ஆண்டிற்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உற்பத்தி துறையில் உலகின் 6-ஆவது பெரிய நாடாக இந்தியா உள்ளது எனத் தெரிவித்த அருண் ஜேட்லி, நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது எனவும் அத்துடன் ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் தொடரும் என்றும், மக்கள் நலனை மத்திய அரசு மிகவும் கருத்தில் கொள்கிறது எனவும் குறிப்பிட்டார்.