இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் புதிதாக கட்டப்பட்டுவந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் 30-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரின் ஜாஜ்மாவ் பகுதியில் ஒரு வருடமாக கட்டப்பட்டு வந்த ஆறு மாடி குடியிருப்பு கட்டுமானப் பணியில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுவந்த நிலையில், இன்று காலை கட்டிடம் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கும் வேளை திடீரென கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தால் பல தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். விபத்து நடந்த இடத்திற்கு உடனும் சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு 7 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.
மேலும் காயங்களுடன் மீட்கப்பட்ட சுமார் 30 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கட்டிடத்திற்கு வலுவான அடித்தளம் இல்லாததே விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.