குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் குமார் குணரட்னத்திற்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குமார் குணரட்னத்திற்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக் குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தினால் கடிதம் ஊடாக குமார் குணரட்னத்திற்கு இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் குமார் குணரட்னத்திற்கு ஓராண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குமார் குணரட்னத்திற்கு குடியுரிமை வழங்குமாறு கோரி முன்னிலை சோசலிச கட்சியினர் போராட்டமொன்றையும் நடத்தியிருந்தனர். குமார் குணரட்னம் ஓர் அவுஸ்திரேலிய பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று மாத காலத்திற்குள் அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையை ரத்து செய்து கொள்ளுமாறு இலங்கைக் குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் கடிதத்தில் அறிவித்துள்ளது.