குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை குறித்து இரண்டு உயர் இராணுவ அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு உயர் இராணுவ அதிகாரிகளே இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தாஜூடீன் கொலை செய்யப்பட்ட தினமன்று ஜனாதிபதி செயலகத்திலிருந்து எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்புக்களின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. தாஜூடீன் கொலை வழக்கு குறித்த விசாரணைகள் இன்றைய தினம் நடைபெற்ற போது புலனாய்வுப் பிரிவினர் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
மாலம்பே தனியார் மருத்துவக் கல்லூரியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புகள் பற்றிய மரபணு விசாரணை இன்னமும் பூர்த்தியாகவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வழக்குத் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டியின் காவல் நிலையப் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரின் விளக்க மறியல் இந்த மாதம் 16ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.