174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந் நாட்டில் இடம் பெற்ற நீண்ட கால கொடிய யுத்தத்தின் விளைவாக உயிர்ச் சேதம், பொருட் சேதம், இருப்பிடச் சேதம் என அனைத்தையும் இழந்து நிர்க்கதியுற்ற நிலையிலும் எம்மவர்கள் வெட்ட வெட்டத் தழைக்கின்ற வாழைமரம் போல் இன்றும் தலை தூக்கி நிற்கின்றார்கள் என்றால் அவர்களின் அடிப்படைக் கல்வி அறிவும் விடாமுயற்சியுமே காரணம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலய கணணி, நூலக வகுப்பறை கட்டட திறப்பு விழா இன்று காலை இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இப்பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கணனி அறை, நூலக அறை, வகுப்பு அறைகள் உள்ளடங்கிய 70 × 25 அடி இரு மாடிக் கட்டிடத்தை மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.
வட்டக்கச்சி மகாவித்தியாலயத்திலிருந்து 2013ம் ஆண்டில் தனியாகப் பிரிந்து எதுவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் இரண்டு தகரக் கொட்டில்களில் இயங்கத் தொடங்கிய உங்கள் ஆரம்பப் பாடசாலை மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாக வளர்ச்சி பெற்று கட்டிடங்கள், பாடசாலை உபகரணங்கள் என அனைத்து வளங்களையும் பெற்று இவ் ஆரம்பப் பாடசாலை மிகச் சிறப்பாக மிளிர்வதற்கு உறுதுணையாக விளங்குகியவர்கள் வட்டக்கச்சி மகாவித்தியாலயம் புலம்பெயர் பழைய மாணவர்களே. அவர்களது உதவி ஒத்தாசைகள் நன்றியுடன் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூரற்பாலது.
இந்த ஆரம்பப் பாடசாலை கல்வியில் மிகச் சிறந்த நிலையில் இருப்பது எமக்கு மகிழ்ச்சி தருகின்றது. கடந்த ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்ட நிலையில் முதலாவது இடத்தைப் பெற்றுக் கொண்ட மாணவன் இப்பாடசாலையிலே தமது ஆரம்பக் கல்வியை பெற்றிருந்தார்.
அதுமட்டும் அல்லாது இன்னும் பல மாணவர்களும் மிகக் கூடிய புள்ளிகளைப் பெற்று சிறப்புத் தேர்ச்சிகளைப் பெற்றிருந்தனர். இது போன்றே வட்டக்கச்சி மகாவித்தியாலயத்திலும் க.பொ.த சாதாரணதரம், க.பொ.த உயர்தரம் ஆகியவற்றில் சிறப்புத் தேர்வுகளை எமது மாணவர்கள் பெற்றுக் கொண்டதை அவதானித்தேன்.
இவை பற்றி ஆராய முற்பட்டபோது சில நல்ல தகவல்கள் கிடைக்கப் பெற்றன. இந்த வட்டக்கச்சி கிராமமானது இரணைமடுக் குளத்தினை அடிப்படையாகக் கொண்ட படித்த வாலிபர்களுக்கான ஒரு குடியேற்றத் திட்டமாக 1956ம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்று அறிகின்றேன்.
இங்குள்ள மக்கள் பல இடங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு படித்த இளைஞர்களாக இங்கு கொண்டு வந்து குடியேற்றப்பட்டனர். எனவே இப் பகுதியில் குடியேற்றப்பட்ட அனைத்து மக்களும் ஓரளவுக்குக் கல்வி அறிவு கொண்ட ஒரு சமூகமாக இருப்பதை நாம் அவதானிக்கலாம்.
கடந்த 60 ஆண்டு கால முயற்சியில் மிகச் சிறப்பான நெல்விளையும் பூமியாக, தென்னை மரத் தோப்புக்களாக, பழமரத் தோட்டங்களாக இப்பகுதி அனைத்து விவசாய நடவடிக்கைகளிலும் மேலோங்கி இருப்பதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. யாழ், கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள பல்வேறு திணைக்களங்கள் அரசாங்க அலுவலகங்களில் காணப்படும் உயர் அதிகாரிகள் இங்கிருந்து வந்தவர்களே என்று அறிகின்றேன்.
விடியற்காலையில் வட்டக்கச்சியில் இருந்து கிளிநொச்சிப் பகுதியை நோக்கி படை எடுத்து அதே போன்று மாலையில் அங்கிருந்து வட்டக்கச்சி நோக்கி அரச வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் சாரிசாரியாக வாகன அணிகளாகத் திரும்பிச் செல்வது வட்டக்கச்சிப் பகுதியின் கல்வி மேம்பாட்டிற்கு சான்று பகரக்கூடிய நிகழ்வாகக் கொள்ளப்படலாம்.
‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்ற கோட்பாட்டிற்கு அமையவே எமது மாணவ மாணவியர் பலர் கல்வியில் சிறப்புடன் செயற்படுகின்றர்கள். தமது வறுமை மறந்து கல்வியில் ஈடுபடுகின்றார்கள். இம் மாணவ மாணவியர் கல்வியில் மேன்மை நிலையை அடையச் செய்வதற்கு வழிகாட்டிகளாக விளங்குகின்ற ஆசிரியர்களை இச் சந்தர்ப்பத்தில் வாழ்த்துவதில் பெருமை அடைகின்றேன்.
உதாரணமாக இப்பாடசாலையில் கடந்த ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 191 புள்ளிகளைப் பெற்று முதல் நிலையைப் பெற்றுக் கொண்ட மாணவன் சாதாரணமாக அவனுடைய வகுப்பறைப் பாடப் புத்தகங்களை மட்டும் வாசித்து இவ்வாறான ஒரு சிறந்த அடைவு மட்டத்தை பெற்றுக் கொண்டிருக்க முடியாது. மாறாக தேடிக்கற்கின்ற வழிமுறை அம்மாணவனுக்கு சிறப்பாக புகட்டப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அன்றி இவ்வாறான அதி சிறப்புத் தேர்வுகளைப் பெறுவது என்பது மிகவும் சிரமம்.
நான் றோயல் கல்லூரியில் பயின்ற போது பல பரிசுகளைப் பெற்றேன். அந்தக் காலத்தில் அதாவது சுமார் 60 வருடங்களுக்கு முன் பரிசுகள் பெற்றால் எமக்கு புத்தகங்கள் வாங்க உரிமைச் சீட்டு தருவார்கள். அதாவது அந்த சீட்டுக்களைக் குறிப்பிட்ட கடைகளில் கொடுத்து அதில் குறிப்பிடப்பட்ட அளவுக்குப் புத்தகங்கள் வாங்கலாம்.
நான் சட்டக்கல்லூரி சேர்ந்ததும் அந்தக் கூப்பன்களைக் கொடுத்து சட்டக்கல்லூரியில் என் பாடப் புத்தகங்களுக்கு மேலதிகமாகப் படிப்பதற்கு உரிய பல புத்தகங்களை வாங்கிப் படித்தேன். அதனால் மேலதிக ஞானம் எனக்குக் கிடைத்தது. இவ்வாறான மேலதிக ஞானமே எமது மாணவர்களுக்குத் தமது பரீட்சைகளில் மிக நன்றாகச் செய்ய வழிவகுத்தது எனலாம்.
இந் நாட்டில் இடம் பெற்ற நீண்ட கால கொடிய யுத்தத்தின் விளைவாக உயிர்ச் சேதம், பொருட் சேதம், இருப்பிடச் சேதம் என அனைத்தையும் இழந்து நிர்க்கதியுற்ற நிலையிலும் எம்மவர்கள் வெட்ட வெட்டத் தழைக்கின்ற வாழைமரம் போல் இன்றும் தலை தூக்கி நிற்கின்றார்கள் என்றால் அவர்களின் அடிப்படைக் கல்வி அறிவும் விடாமுயற்சியுமே அதற்குக் காரணம்.
அன்பார்ந்த மாணவ மாணவியரே! நீங்கள் அனைவரும் கல்வி நடவடிக்கைகளில் சிறப்புறத் திகழ வேண்டும். அதற்கு அல்லும் பகலும் நீங்கள் பாடுபட வேண்டும்.
உங்களுக்குக் கல்வி போதிக்கின்ற ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடனும் சிரத்தையுடன் உங்களுக்குக் கற்றுத் தந்ததாலேயே நீங்கள் இன்று நல்ல நிலையை அடைந்துள்ளீர்கள்.
உங்கள் ஆசிரியர்களை ஆசிரியைகளை எந்தக் காலத்திலும் மறவாதீர்கள். உங்கள் கற்பித்தல் முறைமையானது வெறும் பரீட்சைக்குத் தயார்படுத்தும் நிகழ்வாக அமையாது அறிவுத் தேடலாகவும் அதற்கு உதவுகின்ற வழிமுறையாகவும் அமைய வேண்டும் என ஆசைப் படுகின்றேன்.
தென்னிந்தியாவிலோ இலங்கையிலோ சட்டத்தை தமிழில் முதன் முதலில் கற்பித்த ஆசிரியன் நான். 1971ம் ஆண்டில் அக்கைங்கரியத்தில் ஈடுபட்டேன். சட்டப் பரீட்சைகளில் என்னுடைய மாணவ மாணவியர் என் விரிவுரைகளை மட்டுமே பாவித்தார்கள். ஆனால் சற்று வெளியே சென்று ஆங்கில நூல்களையும் படித்த மாணவ மாணவியர் பரீட்சைகளில் மிக நன்றாக சித்தி அடைந்தார்கள்.
ஆகவே மேலதிக வாசிப்பானது பரீட்சைகளில் நன்றாகச் செய்ய அத்தியாவசியமானது. மாணவச் செல்வங்களே! “கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்” என்பார்கள். உங்கள் பாடப் புத்தகங்களுக்குத் தொடர்புடைய மேலதிக வாசிப்புக்களை மறந்து விடாதீர்கள். என தெரிவித்தார்
Spread the love