185
நான்கு வருடங்களின் முன்பு ஒரு ஜனவரி மாத்தில் கேப்பாபுலவுக்குச் சென்ற குளோபல் தமிழ் செய்திகளின் கட்டுரையாளர் தீபச்செல்வன் எழுதிய பத்தி. நான்கு ஆண்டுகளாக மட்டுமல்ல அதற்கு முன்னரும் மீள்குடியேற்றத்தை தொடர்ந்து இந்த மக்கள் தங்கள் நிலத்திற்காக பல்வேறு வகையான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகளை அண்மின்ற இக் காலத்தில், இலங்கையில் ஆட்சி மாற்றம் மாற்றம் ஒன்று ஏற்பட்ட பின்னர், மீண்டும் இரவு பகலாக கேப்பாபுலவு மக்கள் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றமை பல்வேறு செய்திகளை வெளிப்படுத்துகிறது. கால முக்கியத்துவம் கருதி நான்கு ஆண்டுகளின் பின்னர் இப் பத்தியை குளோபல் தமிழ் மறுபிரசுரம் செய்கிறது. -ஆசிரியர்
கேப்பாபுலவை பார்த்த பொழுது அந்தக் குடியிருப்பு இன்னொரு மெனிக்பாம் முகாமைப்போலவே தெரிந்தது. தடுப்பு முகாங்களில் வாழ்வது என்பது மாபெரும் சித்திரவதையாகும். இன்று சொந்த நிலமே தடுப்புமுகாம் கோலத்திற்கு மாறியிருக்கிறது. ஆனால் முழுக்க முழுக்க ஒரு மெனிக்பாமைபோல இருக்கிறது கேப்பாபுலவு கிராமம். இந்தக் கிராமத்தை ஒரு மாதிரி கிராமம் என்று பெயர்பலகை நட்;டு அடையாளப்படுத்தியிருந்தாலும் அந்தக் கிராமத்தை பார்க்கும் பொழுது ஒரு முகாமாகவே தெரிகிறது. முல்லைத்தீவில் இராணுவத்தின் கோட்டையாக மாறிய ஒரு நிலப்பகுதியில் இராணுவங்களிற்குள் இந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இயல்பும் மகிழ்ச்சியுமற்றிருக்கும் இந்த மக்களின் வாழ்க்கைக்கு என்ன நடந்தது? காலம் காலமாக வாழ்ந்து வந்த இந்த மக்களின் காணிநிலங்களுக்கு என்ன நடந்தது? கேப்பாபுலவை பார்க்கும் பொழுது இக்கேள்விகள்தான் எழுகின்றன. தங்களின் சொந்த நிலத்தில் மீளக்குடியேற பல்வேறு நடவடிக்கைகளை இந்த மக்கள் மேற்கொண்டார்கள். ஆனால் இலங்கை அரச படைகளின் நடவடிக்கைகளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் உத்தரவும் இந்த மக்களை இன்னொரு மெனிக்பாம் முகாமிற்குள் வாழ நிர்பந்திருக்கிறது.
இராணுவமுகாங்களுக்குள் மக்கள்!
இந்த மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்த இடங்களில் தற்பொழுது இராணுவமுகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு நகரத்திலிருந்து செல்லும் பொழுது கண்ணுக்குத் தெரிந்தது எல்லாம் இராணுவமுகாங்கள் மட்டுமே. கேப்பாப்புலவு ஊடாக புதுக்குடியிருப்பு – முல்லைத்தீவு வீதியில் இந்த மக்களின் பூர்வீக வாழிடங்களான சீனியமோட்டை, புலக்குடியிருப்பு, சூரியபுரம் முதலிய கிராமங்கள் உள்ளன. இந்தக் கிhரமங்களில்தான் படையினர் மிகப்பிரமாண்டமான முகாங்களை அமைத்து குடியேறியுள்ளனர். அங்குள்ள காடுகள் தெருக்கள் முழுவதும் இராணுவமுகாங்கள்தான் நிறைக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க இராணுவத்தினர் வசிக்கும் அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை ஒரு சிறைவாசம் போல மூடுண்டிருக்கிறது.
இலங்கை முகாங்கள் என்றாலே மெனிக்பாம் என்றே உலக சமூத்தில் அழைக்கப்படுகின்றது. அண்மையில் இலங்கை அரசு மெனிக்பாமிற்கு மூடு விழா நடத்தியதாக அறிவித்தது. இலங்கை அரசின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் தாமதங்கள் குறித்து ஐ.நாவில் கூட்டிக்காட்டியதையடுத்து மெனிக்பாமை மூடியது. இதனையடுத்து இலஙகையில் இடம்பெயர் அகதிகள் யாரும் இலலை என்று கிளிநொச்சியில் வைத்து கோத்தபாய ராஜபகச தெரிவித்தார். மெனிக்பாமை மூடிவிட்டோம் என்று சாதனையாக அறிவித்த இலங்கை அரசு இன்னொரு மெனிக்பாமை திறந்திருக்கிறோம் என்பதை அறிவிக்கவில்லை. ஏனென்றால் கேப்பாபுலவு கிராமம் இன்று ஒரு மெனிக்பாம் கிராமமாக முள்வேலி முகாமாகத்தான் காணப்படுகின்றது.
நிலத்திற்காய் தேங்காய் அடித்து நேத்தி!
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசபைக்குள் வற்றாபளைக்கும் புதுக்குடியிருப்புக்கும் இடையில் நந்திக்கடலோரமாக கேப்பாபுலவு கிராமம் அமைந்திருக்கிறது. கேப்பாபுலவில் ஒரு பகுதியில் காடழிக்கப்பட்டு வவுனியா மெனிக்பாம் முகாமிலிருந்து கொண்டு வரப்பட்ட மக்கள் குடியிருத்தப்பட்டுள்ளனர். கேப்பாபுலவில் தற்பொழுது 178 குடும்பங்களைச் சேர்ந்த 611 பேர் வசிக்கின்றனர். இந்தக் குடும்பங்களில் 11 பேர் செல்வீச்சில் மரணமடைந்துள்ளனர். 09 பேர் போரினால் ஊனமடைந்துள்ளனர். நான்கு போர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர். பத்துக் குழந்தைகள் தாய் தந்தையரை இழந்துள்ளனர். அத்துடன் 35 பேர் இக்கிராமத்தில் விதவைகளாக்கப்பட்டு;ளனர். போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்த கிராமத்து மனிதர்கள் ஒவ்வொருவரது கதையும் நெஞ்சை சுடுகிறது.
2600 ஏக்கர் நிலப்பகுதியை இராணுவத்தினர் இப்பகுதியில் ஆக்கிரமித்துள்ளமையால் 1000 குடும்பங்கள் நிலமற்ற ஏதிலி நிலையை அடைந்தனர். இதனால் கொந்தளித்த மக்கள் வற்றாப்பாளை அம்மன் கோயிலின் முன்பாக ஒன்று கூடினார்கள். 15 முள்வேலித் தடுப்பு முகாங்களிலிருந்து வந்த மக்களும் வெளியிடங்களில் தற்காலிகமாக தங்கியிருந்த மக்களும் ஒன்றுகூடி தம்மை மீள்குடியேற்ற வேண்டும் என்றும் தமது சொந்த காணி நிலங்கள் கிடைக்க வேண்டும் என்றும் வற்றாப்பளை கண்ணகியம்மனை வேண்டி —- தேங்காய்களை உடைத்தனர். அரசாலும் அரசின் சட்டங்களாலும் அரசியல்வாதிகளாலும் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்ட மக்கள் கடைசியில் கடவுளிடம் காணிநிலம் கேட்டனர்.
இராணுவத்திற்காக நிலம் பறிப்பு!
இந்த மக்களின் சொந்த இடங்களான சினியமோட்டை, சூரியபுரம், புலக்குடியிருப்பு முதலிய பகுதிகளில் இராணுவமுகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களை தமக்கு தர வேண்டும் என்று இந்த மக்கள் கோரிக்கை விடுத்து வந்ததுடன் ஜனநாயக முறையில் குரல் கொடுத்தும் வந்தனர். இந்த மக்களின் காணிநிலங்கள் ஜே.ஆர். ஜெயவர்த்தன இலங்கை ஜனாதிபதியாக இருந்த பொழுது சொர்ணபூமித்திட்டம்; என்ற திட்டத்தில் வழங்கப்பட்டு;ளன. காணிகளுக்கான உறுதிகள் மக்களுக்கே இந்தக் காணிகள் சொந்தமானவை என்றும் அரசால் இந்தக் காணிகளை சுவிகரிக்க முடியாது என்றும் சொல்லுகின்றன. அவ்வாறான நிலத்தைத்தான் இன்று இராணுவத்திற்காக இலங்கை அரசாங்கம் சுவீகரித்து தன் சட்டவிரோதத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்த மக்கள் தங்கள் நிலம் தமக்கு வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தனர். பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதில் ஒன்றாக இலங்கை ஜனாதிபதி மிக்நத ராஜபக்சவுக்கும் ஒரு கடிதம் எழுதி தமது காணிநலத்தை கோரியுள்ளனர். கடித்திற்கு பதில் அனுப்பிய ராஜபக்ச குறித்த காணிகள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றை நாட்டு சூழல் அமைதியை நோக்கி திரும்புவதைப் பொறுத்து கட்டம் கடடமாக திருப்பித் தருவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அப்படியெனில் மீண்டும் புலிகள் நாட்டை தாக்ககூடும் என்றுதான் கேப்பாபுலவு முகாம் உருவாக்கப்பட்டிருக்கிறதா? இலங்கை நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக தமிழ் மக்கள் முகாம் வாழ்க்கையை வாழ வேண்டும் என்றுதான் மெனிக்பாம் உருவாக்கப்பட்டிருக்கிறதா?
வழக்கு போடுவதை எச்சரித்த இராணுவத்தளபதி!
நாட்டின் அபிவிருத்திக்காக மக்கள் நிலத்தை தியாகம் செய்ய வேண்டும் என்று வன்னி மாவட்ட படைத்தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா குறிப்பிட்டார். கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த இடங்களை மறந்துவிட வேண்டும் என்றும் இந்தக் கட்டளைத்தளபதி சொன்னார். காலம் காலமாக வாழ்ந்த மக்களை அவர்களின் சொந்த நிலத்தை மறந்துவிடச் சொல்லுவது எத்தகைய அநீதி? ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்தின் படைத்தளபதி வேறு எதைத்தான் சொல்லுவார்? ஆனால் இந்த மக்களால் தங்கள் காணிநிலத்தை மறந்துவிட முடியவில்லை. இந்த மக்கள் தங்களை இன்னும் அகதிகளாக உணர்வதற்கும் இன்னொரு மெனிக்பாமில் வாழ்வதை உணருவதற்கும் பின்னால் சொந்த நிலத்தை இழந்த துயரம்தான் கொந்தளிக்கிறது.
அரச படைகளுக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கும் எதிராக பலவகையிலும் போராடிய மக்கள் நீதிமன்றத்தில் தங்கள் நிலத்தை மீட்கும் நீதிகோரி வழக்கு தாக்கல் செய்ய முற்பட்டார்கள். வழக்குத் தாக்கல் செய்ய முற்பட்ட பெண்களை இராணுவம் கடுமையாக எச்சரித்தது. இந்த மக்கள் தமது காணிகள் தமக்கு வழங்கப்படவேண்டுமென பாதுகாப்பு செயலாளர், இராணுவத்தளபதி, சட்டமா அதிபர், முல்லை இராணுவத்தளபதி, கேப்பாபுலவு இராணுவ அதிகாரி முதலியோருக்கு கடிதம் எழுதினார்கள். வழக்கு தொடுத்த பெண்களை இராணுவ அதிகாரிகள் மக்கள் முன்னிலையில் வைத்து தகாத வார்த்தைகளைப் பிரயோகம் செய்து ஏசியுள்ளனர். தமது நிலத்தை கோரி ஜனநயாக ரீதியாக நடவடிக்கை எடுத்த பெண்களை இப்படித்தான் இராணுவத்தினர் அணுகியுள்ளனர். இதனால் தமது உயிருக்கு ஆபத்து நேர்ந்ததாகவும் அந்தப் பெண்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இதுவும் ஒரு முள்வேலிமுகாம்தான்
நீங்கள் ஒரு முள்வேலி முகாமிற்குள் இருப்பதை உணரவில்லையா? என்று இந்தக் கிராமத்தில் பார்த்த ஒரு முதியவர் கேட்டார். யுத்தம் முடிந்து வவுனியாவிற்குள் அடைக்கப்பட்ட இந்த மக்கள் மூன்றாண்டுகள் முகாம் வாழ்க்கையை வாழ்ந்தார்கள். ஆனால் மூன்றாண்டுகளுடன் முள்வேலி வாழ்வு முடியவில்லை. கேப்பாபுலவு இன்னொரு இன்னொரு மெனிக்பாமாக்கப்பட்டு முள்வேலி வாழ்வு இன்னும் தொடர்கிறது. முகாமில் வசிக்கும்; மக்களைவிடவும் இராணுவத்தினர்தான் அதிகமாகத் தெரிகின்றனர். இராணுவத்தினர் இக்கிராமத்தில் சில நிரந்தர வீடுகளை அமைக்கும் பணியாளர்காக மாறியுள்ளனர். அதுவே இந்தக் கிராமத்தில் எதையும் செய்ய முடியாத முள்வேலிகளாக இராணுவத்தினரை நிறுத்தியுள்ளதாக தெரிகிறது.
பல இடங்கில் மக்கள் பேசப் பயப்பட்டார்கள். தங்கள் பிரச்சினைகைளை சொல்ல தயங்கினார்கள். இராணுவம் இந்தக் கிராமம்மீது கடும் காண்காணிப்பு செலுத்துகிறது. ஒரு தடுப்புமுகாமை இராணுவம் எப்படிக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும்? அதைத்தான் கேப்பாபுலவில் இராணுவத்தினர் செய்கின்றனர். கேப்பாபுலவு மட்டுமா மெனிக்பாம் ஆக்கபட்டிருக்கிறது? புதுக்குடியிருப்பு நகரத்திலிருந்து கேப்பாபுலவு செல்லும் வழியில் பத்தாம் வட்டாரத்தில் அண்மையில் குடியேறிய மக்கள் வசிக்கின்றனர். சிறிய சிறிய தறப்பர்கூடாரங்களில் அங்கு மக்கள் வசிக்கின்றனர். அதுவும் பார்ப்பதற்கு மெனிக்பாம்போலத்தான் இருக்கிறது. இன்று கூடார மயமாகியுள்ள வன்னிப் பெருநிலப்பரப்பில் பல மெனிக்பாம்களை இலங்கை அரசு திறந்திருக்கிறது.
சனங்களின் சிதலுறும் கதைகள்
அங்கு ஒருப்பளிக்கூடம் இருக்கிறது. ஒரே ஒரு சிறிய தகரக் கட்டடிடம். அதையும் ஒரு கூடாரம் என்றுதான் சொல்ல வேண்டும். அநதக் கூடாரத்திற்குள் 73 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். தரம் ஐந்து வரையான ஆரம்ப பாடசாலை அது. அந்தப் பாடசாலைக்குச் சென்றுவிட்டு மாணவரகள் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு சிறுவன் என்னுடன் நெருக்கமாகப் பேசத் துவங்கினான். அவனுடன் பேசிக் கொண்டிருந்தபொழுது தனது தந்தையும் தாயும் செல் தாக்குதலில் இறந்து விட்டார்கள் என்று அவன் சொன்னான். அந்தச் சிறுவனின் பெயர் விஷ்ணுவதனன்.
அவன் இப்பொழுது தனது அம்மம்மாவுடன் வசிக்கிறான். என்னை தனது அம்மாவிடம் அழைத்துச் சென்றான். பிரசர் நோயினால் பாதிக்கப்பட்ட முதிய தாய் விஷ்ணுவதனனி;ன் எதிர்காலம் பற்றியே கவலைபட்டுக் கொண்டிருநதார். தான் இல்லாமல் பொகும் பொழுது இச்சிறுவனை யார் பார்ப்பார்கள்? அவனுக்கு யார் உள்ளனர் என்ற கேள்வி அவரை துயருத்துகிறது. இவையோடு தனது 23 வயதான மகன் ஒருவன் இறந்த சோகத்தையும் அவர் சொலலிக் கொண்டிருந்தார். போரில் நேரடியாக பாதிக்கட்ட 11 பேரை இழந்த குடும்பங்களும் 09பேர் ஊனபபட்ட குடும்பங்களும் 10 தாய் தந்தை இழந்த பிள்ளைகளும் இப்படியாக சிதலுறும் போர்க்கதைகளை சுமந்திருக்கின்றனர்.
ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு நபரும் போரினால் பாதிக்கப்பட்டிருக்கினறனர். மோகனராணி புலேந்திரம் கணவைரயும் ஒரு பிள்ளையையும் இழந்தார். தற்பொழுது ஒரு பிள்ளையுடன் வசித்து வருகின்றார். செல்வராணி ராஜரட்ணம் கணவரையும் மூன்று பி;ளைகளையும் போருக்குப் பலி கொடுத்திருக்கிறார். தற்பொழுது ஒரு பிள்ளையுடன் வசித்து வருகின்றார். எல்லா மக்களிடமும் வாழ வேணடும் என்ற நம்பிக்கை மிகுந்திருக்கிறது. பிள்ளைகளுக்கு படிக்க வேணடும் என்ற ஆசை மிகுந்திருக்கிறது. ஐந்தாம் வகுப்பில் படிக்கும் விஷ்ணுவதனன் வகுப்பில் முதல் மூன்று பிள்ளைகளுக்குள் வருபவன். அவன் மிகவும் நனறாக படிக்க கூடியவன். தன்னுடைய கல்வி ஆர்வத்தின் மூலம் எதிர்காலத்தில் அவன் சிறந்து விளங்குவான் என்று ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டார். அவன் துடிப்பும் புத்திசாலித்தனமும் அன்பும் கொண்ட சிறுவனாகவே தெரிகின்றான்.
சொந்த நிலத்தில் எப்பொழுது வாழ்வு?
எங்கள் ஊரில் இருந்திருந்தால் எங்கள் வாழ்வு எப்படி மகிழ்வாகவும் செழிப்பாகவும் இருந்திருக்கும் என்று கேட்கின்றனர் சனங்கள். எங்கள் உழைப்பு எல்லாமே எங்கள் காணியில்தான் உள்ளது. வீடு, கிணறு, பயிர்கள், மரங்கள் எல்லாம் நாங்கள் வியர்வை சிந்தி உருவாக்கியவை என்கிறார்கள் இன்று முழுக்க முழுக்க கால் ஏக்கர் காணி ஒன்றினுள் வரிசையாக அமைக்கப்பட்ட கூடாரங்களில் இந்த மக்கள் வாழ்கின்றனர். ஒவ்வொரு நபருக்கும் எப்பொழுது சொந்த நிலம் என்ற கேள்வி உள்ளே கொந்தளிக்கிறது. இன்றைக்கு ஒரு காட்டை வெட்டி ஆதிக்குடிகள் போல குடியிருக்கும் இவர்கள் இழப்பது தங்கள் காணிகளை மட்டுமல்ல. பூர்வீக வாழ்வையும் அந்த வாழ்வின் வரலாற்றையும் எங்கள் கதைககைளயும் இந்த மக்கள் இழக்கிறார்கள்.
இந்த மக்கள் தமது சொந்த நிலத்திற்குத் திரும்பும் காலம் வருமா என்று காத்திருக்கிறார்கள்.இராணுவமுகா ங்களுக்காக காணிநிலங்களை அபகரித்த நிலையில் நாட்டில் அமைதி திரும்பி முடியும் பொழுது உங்கள் காணிகள் உங்களுக்கு தரப்படும் என்ற ராஜபக்ச சொன்ன வார்த்தையை காப்பாற்றுவாரா? அல்லது அவர் சொல்லும் அமைதி எப்பொழுதாவது திரும்புமா? ஒரு குடிநிலத்தை ஆக்கிரமித்து இராணுவமுகாக்கும் பொழுது அந்த குடிநிலத்து மக்களின் வாழ்வு அடியுடன் அழிகிறது. இன்று கேப்பாபுலவு மக்களின் வாழ்க்கை மட்டுமல்ல பல ஈழக் கிராமங்களில் இந்த அழிவு நீடிக்கிறது. வடக்கு கிழக்கு எங்கும் எழுகிற அதே கேள்விதான். எங்கள் சொந்த நிலத்தில் எப்பொழுது வாழ்வு? அப்பொழுதுதான் இந்த மக்கள் வாழத் தொடங்குவார்கள்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
Spread the love