மக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிப்பதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமுலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்குகளையும் டெல்லி சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தயாநிதி மாறன் இந்திய மத்திய அமைச்சராக இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது எயர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக தெரிவித்து இதுதொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதுடன் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மொரீஷியஸ் நிறுவனங்களிடம் இருந்து சவுத் ஏஷியா எப்எம் லிமிடெட் மற்றும் சன் டிரைக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு 742.58 கோடி ரூபா கைமாறியுள்ளதாக கூறி, அமுலாக்கப்பிரிவு சார்பில் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு இந்த வழக்கும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனவும் ஆகையால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவிக்கிறேன் எனவும் நீதிபதி ஓபி ஷைனி, தீர்ப்பளித்துள்ளார்.