முல்லைத்தீவு மாவட்டம் – கேப்பாப்பிலவு கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராம மக்கள், தமது காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஆரம்பித்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இரவு பகலாக இன்று (வெள்ளிக்கிழமை) நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
கேப்பாப்பிலவு விமானப்படை தளத்தின் 2ஆவது நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆனந்தசங்கரி நேற்றிரவு சந்தித்து கலந்துரையாடி உள்ளார்..
யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கிய மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள படையினர், அங்கு ராணுவ மற்றும் விமானப்படை தளத்தினை அமைத்துக்கொண்டு மக்களை உள்நுழைய விடாமல் தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இக்கிராமத்தின் ஒருதொகுதி காணியை விடுவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த போதும், குறிப்பட்டவாறு விடுவிக்காத நிலையில், கிராம மக்கள் தமது பிள்ளைகளுடன் இரவு நேரத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.