தேசிய சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் சமயக் கல்விக்கு முக்கிய பொறுப்பு உள்ளது என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சர்வ மத அறநெறிப் பாடசாலைகளின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் பற்றிய எண்ணக்கருவினை சர்வ மத தலைவர்கள் மற்றும் சர்வ மத அறநெறி ஆசிரியர்களின் ஊடாக சமயக் கல்வியுடன் இணைப்பதனை நோக்காகக் கொண்டு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் இந்த நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருப்பினும் பிள்ளைகளுக்கு பரஸ்பர நம்பிக்கையையும், சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்ப சமயக் கல்வியினூடாகவே வழியேற்படுத்த வேண்டுமெனச் சுட்டிக்காட்டியதுடன் தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபட்டு நேர்மறை எண்ணங்களுடன் கூடிய சிறந்தவொரு எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதற்கு சமயக் கல்வி அடித்தளமாகக் காணப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை அரசாங்கத்தின் கொள்முதல் நடவடிக்கைகளைப் பலப்படுத்தும் நோக்கில் கொள்முதல் ஆணைக்குழு அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஜனாதிபதி இன் ஜனாதிபதி செயலகத்தில்; நடைபெற்றது.
அரசாங்கத்தின் கொள்முதல் ஆணைக்குழுவுக்கு தாக்கம் செலுத்தும் பிரச்சினைகள் குறித்தும் கொள்முதல் நடவடிக்கைகளை வினைத்திறன்மிக்கவகையில் முன்னெடுப்பதற்கான தேவைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க, தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் தலைவர் பீ.என்.ஐ.எப்.ஏ. விக்ரமசூரிய உள்ளிட்ட அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.