தம்பி இன்றைக்கு பஸ் இல்லையாம். ஸ்ரீலங்கா சுதந்திரதினமாம். தெரியாத்தனமாய் வந்திட்டன். எப்பிடி போறது என்று கேட்டார் மன்னாரிலிருந்து வந்த செல்வி அக்கா. ஓ இன்றைக்கா அந்த கறுப்பு நாள் என்று நினைத்துக் கொண்டேன். நாங்கள் ஸ்ரீலங்கா பிரஜைகள் இல்லை என்பதையும் எங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதையும் இந்தக் காலையின் இயல்பான உரையாடல் உணர்த்தி விட்டுப் போவதாகவே கருதுகிறேன்.
உலகத்தில் எங்குமே யாருக்குமே சுகந்திரம் கிடைத்ததைப்போல தெரியவில்லை. மக்கள் எங்கும் ஏதோ ஒரு அதிகாரத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுகிறார்கள். இதைப்போலத்தான் ஈழத்து மக்களுக்கும் விடுதலை கிடைக்காமல் அந்நிய ஆட்சிக்குள் அடக்கி ஒடுக்கப் படுகிறார்கள். முற்றிலும் அந்நியமான இலங்கை சுகந்திரதினத்தில் ஈழத் தமிழர்கள் விலகியிருக்க நினைக்கிறபோதும் இவை பெருந்தேசியமாக அதன் அலைகளாக அதன் படைகளாக ஈழத் தமிழர்களின் கழுத்தை நெறித்துக் கொண்டேயிருக்கிறது.
அந்நிய படைகளாலும் அரசாலும் ஈழத் தமிழ் அரசுகள் கலைப்பட்ட பொழுது ஈழத் தமிழர்களின் சுகந்திரம் இழக்கப்பட்டது. சிங்கள அரசுகளிடம் இலங்கை என்ற இராட்சியத்தில் ஈழம் மூழ்கடிக்கப்பட்ட பொழுது மீண்டும் விடுதலை வேண்டி ஈழத் தமிழினம் போராடத் தொடங்கியது. இலங்கை சுதந்திரம் இத்தனை ஆண்டுகளும் ஈழத் தமிழர்கள் தமது சுதந்திரத்திற்காக போராட வேண்டும் என்ற அவசியம் உணர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ஈழத்து மக்களின் விடுதலைக்காக லட்சக்கணக்கான உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுள்ளன. ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தப்பட்டது. சொல்லணாத் துயரங்களின் ஊடாக போராட்டப் பாதையில் யுத்த்தின் பாதையில் மக்கள் பயணித்திருக்கிறார்கள். இலங்கை அரசின் அடக்குமுறைப் போக்குகளாலும் உலகின் அடக்கு முறைப் போக்குகளாலும் பறிபோன விடுதலை தொடர்பில் தொடர்ந்தும் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
தமிழ் தேசியக் கட்சிகளின் கோரிக்கைகளும் போராட்டங்களும் ஈழப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டங்களும் என்று விடுதலை வேண்டிய கோரிக்கை பல வகையில் கிளர்ந்திருந்தது. எனினும் மக்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை!
விடுதலை கேட்டுப் போராடிய ஈழத் தமிழ் மக்களை மேலும் ஒடுக்கி அழித்து உரிமைகளை பறித்து இன அழிப்பை செய்து வருகின்றன சிங்கள அரசாங்கங்கள். விடுதலைக்குப் பதிலாக அழிவையும் பயங்கரங்களையும் தமிழ்மக்கள்மீது திணித்து வருகின்றன. சாக்காடாகவும் லட்சம் உயிர்கள் புதைந்த மண்ணாகவும் மாறிவிட்ட ஈழத் தமிழர்களின் வாழ் நிலத்தில் மீண்டும் தனது சிங்களப் பெருந்தேசியவாத தந்திரங்கள் நிறைவேற்றப்பட்டுகின்றன. ஈழத் தமிழர்களின் சகல உரிமைகளும் இலங்கை அரசின் அடக்குமுறைக்குள் புகைக்கப்பட்டிருக்கின்றன.
இப்படி வெறும் இனமாக அவலங்களை ஒடுக்குமுறைகளை பயங்கரங்களை எதிர்கொள்ளும் ஒரு இனம் தனது அடிமைத்தனம் குறித்தும் அதற்கு எதிராக தொடங்கிய போராட்டங்கள் குறித்தும் இனி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் இன்றும் அதிகம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
தங்கள் சுகந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்பதையே அடக்குமுறையுடன் கடந்த கால அரசு நடைமுறைப்படுத்தியது. மக்கள் விரும்பி சுகந்திரத்தை உணர்ந்து தாமாக கொண்டாட வேண்டியதுதான் சுதந்திரதினம். அது அவர்கள் அத்தேசத்தின் பிரஜைகளாக உணர்ந்து கொண்டாடுவது. ஆனால் இலங்கையில் தமிழர்களின் நிலை அப்படியல்ல. தமிழர்களை சுகந்திரதினத்தை கொண்டாட இராணுவம் நிர்பந்தித்தமையும் கடந்த கால வரலாறு. வடக்கு கிழக்கு என்ற தமிழர்களின் தாயகத்தில் தமிழர்கள் இலங்கை சுகந்திரதினத்தை இந்த ஆண்டு கொண்டாடவில்லை என்பது இலங்கை சுதந்திரம் தமிழர்களுக்கு பகிரப்படவில்லை என்பதையும் சிங்களப் பேரினவாதத்தால் தமிழர்கள் எப்படி அடக்கப்படுகிறார்கள் என்பதையும் தெளிவாக உணர்த்துகிறது.
இலங்கை அரசும் அதன் கூறுகளும் பௌத்த சிங்கள அடையாளத்துடன் ஈழத்தமிழனத்தை கடுமையாக எச்சரிக்கின்றது. தமிழ் மக்களை அடிமைகளாக மிதித்துக் கொண்டு அவர்களின் உரிமையை மறுத்துக் கொண்டு, அவர்களின் அடையாளங்களை முற்றிலும் புறக்கணித்து, அதை அழித்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தும் ஒரு அரசு அந்நிய அரசே. தமிழ் இனத்தையும் அதன் கனவையும் போராட்டத்தையும் யாரும் புரியவில்லை என்று கூற முடியாது. நன்கு புரிந்து கொண்டு ஆழமாக கால்களை உள்ளே வைத்துக் கொண்டே தமிழ் இனத்தின் விடுதலை முனைப்புக்களை ஒடுக்கியிருக்கிறது இலங்கை அரசு.தமிழ் இனத்திற்கு சுதந்திரம் மறுக்கப்பட்டதே வரலாறு.
ஜனநாயக சோசலீச குடியரசு ஜனாதிபதிகளின் வரலாறு முழுவதும் இந்த அடக்குமுறை கனகச்சிதமாக செய்யப்பட்டு வருகின்றன. பண்டா முதல் ஜெயவர்த்தன முதல் சிறிமா முதல் ஈழத் தமிழரின் விடுதலை வாழ்வை விழுங்கும் கதைகள் தொடர்கின்றன. ஈழத் தமிழ் மக்கள்மீது மாபெரும் இன அழிப்புப் போரை நடத்திய இலங்கை அரசு மீது யுத்தக் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலகெங்கிலுமிருந்தும் குரல்கள் ஒலிக்கின்றன.
எங்களை நாங்களாக இருக்க விடுவதும் தொல்லைகள் ஏதும் தராமல் இருக்க விடுவதுமே எங்களுக்குப் பெரும் விடுதலை. எங்களை கொல்லாமல் மிரட்டாமல் எங்கள் தெருவில் நாங்கள் திரிய எங்கள் வீட்டில் நாங்கள் வாழ எங்கள் பிள்ளைகளை சிறையை திறந்து வெளியில் விட்டு எங்கள் கிராமங்களை எங்களிடம் தந்தால் அதுவே பெரும் சுகந்திரம். சிங்களப் பேரினவாத கொள்கைகளிடமிருந்து நிரந்தரமான நியாயமான நிலைத்திருக்கும் சுதந்திரமே எங்களுக்குத் தேவையானது. இந்தத் சுகந்திரதினம் என்பது சிங்கள பெருந்தேசிய வாதத்தை கொண்டாடும் நாள் என்பதே ஈழத் தமிழர்களால் உணரப்படக்கூடியதாகவே வரலாறு முழுவதும் கடந்திருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கு எப்பொழுது சுதந்திரம்?