தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா உதாசீனம் செய்யும் விதமாக செயற்பட்டு உள்ளார்.
இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினமான நேற்றைய தினம் ஜனாதிபதி உரையாற்றும் போது ” சுதந்திரம் பற்றி பேசுகின்றபோது முப்பது வருடத்திற்கும் மேலாக எமது நாட்டை எல் ரீ ரீ ஈ. பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிப்பதற்காக போராடிய வீரர்களை நினைவுகூர்வது முக்கியமானதாகும்.” என குறிப்பிட்டு இருந்தார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி யாழ் கீரிமலை பகுதியில் நல்லிணக்கபுரம் வீடுகள் கையளிப்பு நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ” அரசியல் தலைவர்கள் இராணுவத்தினர் ஆகியோர் , பயங்கரவாதிகள் , மற்றும் பயங்கரவாதம் என உச்சரிக்காமல் விடுவது நல்லது. தொடர்ந்து இவ்வாறான சொல்லை சொல்லாமல் தவிர்ப்பதுடன் தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் எனும் நிலைப்பாட்டில் சிங்களமக்கள் இருக்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி போர்க்காலத்தில் அரச தரப்பினர்களும் , அவர்களுக்கு எதிரானவர்களும் ஆயுதம் ஏந்தி போராடினார்கள் என குறிப்பிட்டார்.
அதேபோன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் பகிரப்பட்ட செய்தியிலும் பயங்கரவாதிகள் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கு தமிழ் முகநூல் பயனுனர்கள் கடுமையான எதிர்ப்பினை முகநூலில் வெளியிட்டனர். அதனை தொடர்ந்து ஜனாதிபதியின் முகநூலில் இருந்து பயங்கரவாதிகள் எனும் சொல் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(ஜனாதிபதி தனது முகநூலில் முன்பு தெரிவித்த கருத்துகளும் பின்னர் அவை நீக்கப்பட்டு திருத்தி வெளியிடப்பட்ட கருத்தும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது)