யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட ஊறணி பகுதியில் படையினர் வசமிருந்த கரையோரப்பகுதியில் மேலும் ஒருதொகுதி விடுவிக்கப்பட்டுள்ளது. தேசிய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு நேற்று (சனிக்கிழமை) ஊறணி – இறங்குதுறைக்குச் செல்லும் இந்தக் கரையோரப்பகுதி, விடுவிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட பகுதியை யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சிறிமோகனன் ஆகியோர் நேற்று மாலை மக்களிடம் கையளித்துள்ளனர். கடந்த வருட இறுதிப்பகுதியில் மீள்குறியேற்றப்பட்ட இப் பகுதி மக்கள், தமது வாழ்வாதார தொழிலான மீன்பிடியை முன்னெடுப்பதற்காக ஊறணி கரையாரப்பகுதியை விடுவிக்க வேண்டுமென நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக, கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி 2 கிலோமீற்றர் நீளமான கரையோர பகுதியும் இரண்டு ஏக்கர் நிலப்பகுதியும் விடுவிக்கப்பட்டது. எனினும், தமது தொழிலை தங்குதடையின்றி மேற்கொண்டு செல்ல இறங்குதுறைக்குச் செல்லும் பகுதியும் விடுவிக்கப்பட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது இப் பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது.