அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் முதல் முறையாக கடந்த மாதம் 27-ந் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. மீண்டும் ஒரே வாரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை சட்டசபைக் குழு தலைவராக முன் மொழிந்தார். இதனைத் தொடர்ந்து அவர் சட்டசபைக் குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் சசிகலா முதல்வர் ஆவதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என ஏற்கனவே அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், இன்று சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவர் முதல்வர் ஆவதற்கான வழிகள் திறக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அரசியல் வட்டாரங்களில் கூறியது போன்று பிப்ரவரி 9ம் தேதி தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, போயஸ்கார்டனில் 2 மணி நேரத்திற்கும் மேலாக சசிகலாவுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் ஓபிஎஸ், அமைச்சர்கள், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம்
சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்தனை தொடர்ந்து அவர் விரையில் முதல்வராக பதவியேற்கவுள்ளார். நாளை அல்லது 9ஆம் தேதி சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது. நிதி அமைச்சர் பதவி மாஃபா பண்டியராஜனுக்கு வழங்கப்படும் என்றும் செங்கோட்டையனுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கட்சியும் ஆட்சியும் ஓரே நபரிடம் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.