குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் மீது நம்பிக்கையில்லை என ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மோசடி குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் அரசியல் தலையீடு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கோப் குழுவினால் விசாரணைகள் நடத்தப்பட்டு மோசடி உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதி ஆணைக்குழு மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் மட்டுமே விசாரணைகளை நடத்தவுள்ளதாகவும், ஊழியர் சேமலாப நிதி தொடர்பான விசாரணைகள் நடத்தப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே, இவ்வாறான விசாரணைகளின் மூலம் மோசடிகளை முழுமையாக வெளிக்கொணர முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.