தமிழக அரசியல் நிலவரம் குறித்து இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிடுவதற்காக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததையடுத்து ஆளுங்கட்சியில் பல மாற்றங்கள செய்யப்பட்டு வருகின்றன.
முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வந்த நிலையில், ஜெயலலிதா வகித்து வந்த கட்சியின் பொதுச்செயலாளர் பதவி சசிகலாவுக்கு சென்றது. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலாவை தேர்வு செய்து, அவர் முதலமைச்சராக பதவியேற்கும் நடைமுறைகளை செய்யத் தொடங்கி உள்ளனர்.
தமிழக ஆளுனர் சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதால், சசிகலா முதலமைச்சராக பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டுள்து. அதேசமயம், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளதனால் தீர்ப்புக்கு முன் சசிகலா பதவியேற்கக் கூடாது என்ற கருத்தும் நிலவுகிறது.
இத்தகையதொரு அரசியல் சூழ்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். டெல்லியில் நாளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கும் ஸ்டாலின், தமிழகத்தின் தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்து விளக்க உள்ளார். மேலும் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்புக்குப் பின் பதவியேற்பு விழாவை அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்ளலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்கவும் ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.