வரையறுக்கப்பட்ட அசோசியேடட் பத்திரிகை நிறுவனத்தின் செயற்பாடுகளை முறைமைப்படுத்துதல் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நால்வர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் நிமல் திசாநாயக்கா தலைமையிலான அக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ராஜா பிரேமதாச, வீ.டீ.தகநாயக்கா, சட்டத்தரணி சந்ரசிறி செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழு லேக்ஹவுஸ் நிறுவனத்தின் நிர்வாக மற்றும் முகாமைத்துவ பலவீனங்களை இனங்காணுதல், நிதிநிலை மற்றும் ஊழியர் நிர்வாகம் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஆராயவுள்ளது.
அறிக்கை தயாரிக்கும் போது ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டு, குழுவின் அறிக்கை 03 மாதத்தினுள் ஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
நிறுவனத்தின் சிங்கள, தமிழ், ஆங்கில பத்திரிகைகள் அனைத்தையும் உயர் தரத்துடன் வாசகர்களுக்கு வழங்குதல் மற்றும் லேக்ஹவுஸ் நிறுவனத்தை ஏனைய தனியார் அச்சு ஊடக நிறுவனங்களுடன் போட்டியிடக் கூடியவாறு முன்னேற்றுவதும் இதன் நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவுதெரிவித்துள்ளது.