அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் கொண்டுவராமல் இடைக்கால பொதுச்செயலர் ஒருவரை நியமிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணைய வட்டாரங்கள் பொதுச்செயலராக சசிகலாவை நியமித்தமை செல்லுபடியாகாது என தெரிவித்துள்ளன.
அதிமுக சட்டவிதிகளின் படி பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி அதிமுக உறுப்பினர்களும் வாக்குப்பதிவு செய்து தேர்வு செய்தால்மட்டுமே ஒருவர் பொதுச்செயலராக முடியும்.
1972-ம் ஆண்டு திமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர், பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டும் அல்லாது கட்சியின் அடிப்படை உறுப்பினர்களுமே பொதுச்செயலரை தேர்வு செய்ய வேண்டும் என கட்சி விதியை உருவாக்கினார்.
அதேபோல் அதிமுக விதிகளின்படி தற்காலிக பொதுச்செயலர் அல்லது இடைக்கால பொதுச்செயலர் என ஒருவரை நியமிக்கவும் முடியாது. இவற்றை முன்வைத்து தேர்தல் ஆணையத்திடம் சசிகலா நியமனத்துக்கு எதிராக சசிகலா புஷ்பா முறையீடு செய்தார்.
இந்த முறையீட்டினைத் தொடர்ந்து சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் அதிமுகவின் சட்டவிதிகளில் உரிய திருத்தம் மேற்கொண்டால் மட்டுமே இடைக்கால பொதுச்செயலர் என ஒருவரை நியமிக்க முடியும் எனவும் அப்படி செய்யாமல் பொதுச்செயலர் ஒருவரை அதிமுகவில் நியமிக்க முடியாது என தீர்மானித்திருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் தேர்தல் ஆணையம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.