182
நல்லாட்சிக்கான அரசாங்கம் என்றும் தேசிய அரசாங்கம் என்றும் சிறப்பாகக் குறிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிகள் இணைந்த கூட்டு அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை சிதைந்து கொண்டிருக்கின்றது. அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் படிப்படியாகக் குறைந்து செல்வது கவலைக்குரிய விடயமாகும்.
நல்லாட்சி அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்திற்கும், ஐக்கியத்திற்கும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது, குறிப்பாக தேசிய நல்லிணக்கத்திற்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால் தேசிய நல்லிணக்கத்திற்குப் பதிலாக போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துச் செல்வதையே காண முடிகின்றது.
தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கிச் செயற்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்த அரசு நிச்சயமாகத் தீர்த்து வைக்கும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் முழுமையாக நம்பியிருக்கின்றார்கள். அராசங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதற்குரிய ஆதரவை வழங்க வேண்டும் என்று அந்தத் தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் வலியுறுத்தி வருகின்றார்கள்.
முன்னைய ஆட்சியைப் போலல்லாமல், புதிய ஆட்சியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று அந்தத் தமிழ்த் தலைவர்கள் கூறி வருகின்றார்கள்.
புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படும்.
அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அது தொடர்பாக பல சுற்று பேச்சுக்கள் நடத்தப்பட்டிருக்கின்றன என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரன் ஆகியோர் கூறுகின்றார்கள்.
கழிந்து போன 2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படும் என்று சம்பந்தன் மிகுந்த நம்பிக்கையோடு தெரிவித்திருந்தார்.
ஆனால் 2016 ஆம் ஆண்டு அமைதியாகக் கழிந்து போனதே தவிர எதிர்பார்க்கப்பட்ட அரசியல் தீர்வு கிடைக்கவில்லை.
அரசியல் தீர்வு கிடைத்துவிடும் என்று அடித்துக் கூறிய அல்லது அதீத நம்பிக்கை கொண்டிருந்த சம்பந்தன், இந்த புதிய ஆண்டில் தீர்வு கிடைக்கும் என்று கூறியிருக்கின்றார்.
இனப்பிரச்சினை போன்ற சிக்கல்கள் பல நிறைந்த – புரையோடிப் போயுள்ள ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்பது இலகுவான காரியமல்ல. இலகுவில் தீர்வு காண முடியும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.
அதேநேரம் தீர்வு ஒன்றை நோக்கி நம்பிக்கை வைத்துச் செயற்படுவதைப் பிழையான நடவடிக்கையாகக் கூற முடியாது. நம்பிக்கை வைத்துச் செயற்படுவது வேறு, நிச்சயமாகத் தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பிக்கையூட்டி, அந்த நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்வதற்கான, ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பது வேறு.
ஆனால் புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கப்பட்டிருக்கின்றதே தவிர, அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தி வளர்த்துச் செல்லும் வகையில் அந்த அரசாங்கத்தைச் செயற்பட வைப்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்னேற்றம் காணவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
எரியும் பிரச்சினைகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர், காணாமல் போகச் செய்யப்பட்டிருப்பவர்கள் பற்றிய பொறுப்பு கூறுதல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தை வெளியேற்றி, இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை மீளக் கையளித்தல், யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்களாகிவிட்ட போதிலும், இன்னும் அகதிகளாக இடம்பெயர்ந்;திருப்பவர்களை மீள்குடியேற்றுதல், மீள் குடியேற்றப்பட்டுள்ளவர்களுக்கான முறையான வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் முன்னாள் போராளிகள், விதவைகள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் மறுவாழ்வு போன்ற பல பிரச்சினைகள் இன்று எரியும் பிரச்சினைகளாகத் தீவிரம் பெற்றிருக்கின்றன.
பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில் நம்பிக்கையூட்டி, முன்னோக்கி நகர்ந்து செல்வதற்கான சூழலை ஏற்படுத்துகின்ற வகையில், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அப்போதுதான் நல்லாட்சி அரசாங்கம் தாங்கள் எதிர்பார்த்தவாறு, பிரச்சினைளுக்கு முடிவேற்படுத்துவதற்காகச் செயற்பட்டு வருகின்றது என்ற நம்பிக்கையுடன் கூடிய எண்ணம் பாதிக்கப்பட்ட மக்கள் மனங்களில் ஏற்பட வழி வகுக்கும்.
ஆனால், எரியும் பிரச்சினைகளைக் குறைப்பதற்குப் பதிலாக, அவற்றின் எண்ணிக்கையைக் அதிகரித்துச் செல்கின்ற ஒரு சூழலே, நல்லாட்சி என கூறப்படுகின்ற இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் கூடுதலாகக் காணப்படுகின்றது.
பிரச்சினைகள் தீர்ந்து நல்ல முறையில் வாழலாம் என்று மிகுந்த நம்பிக்கையோடு வாக்களித்து உருவாக்கப்பட்ட புதிய அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை வளர்த்துச் செல்வதில் தவறி வருகின்றது. இருக்கின்ற நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்வதற்குக்கூட அரசாங்கம் முயற்சி செய்வதாகக் கூற முடியவில்லை.
இதனால், தங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய அரசாங்கம் பாராமுகமாக நடந்து கொள்கின்ற ஒரு சூழலில் அந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துச் செயற்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் செயற்பாடுகளைச் சரியான செயற்பாடுகள் என்று பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.
தமிழ் மக்களின் அரசியல் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைத் தன்மைக்கு பாதிப்பையே இந்தச் சூழல் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய ஒரு நிலைமை இப்போது யதார்த்தமாகியிருக்கின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்து அமைதி காக்க முடியாது. அல்லது அந்தப் பிரச்சினை குறித்து தொடர்ந்து பாராமுகமாக நடந்து கொள்ளவும் முடியாது.
காலத்தை இழுத்தடித்து, மூழ்கடித்துவிடலாம் என்று எண்ணிச் செயற்படுவதற்கு அது ஒரு சாதாரண பிரச்சினையல்ல. இதனை அரசாங்கம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதேவேளை, இந்த அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிச் செயற்பட்டு வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்களும் இதனைத் தீவிரமாகக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்சினை என்பது ஆழமாக வேரூன்றி பாதகமான பல்வேறு நிலைமைகளை ஏற்படுத்தக் கூடிய மிக மோசமான பிரச்சினை என்பது எல்லோருக்கும் தெரியும். காணாமல் போயிருப்பவர்கள் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்று அரசாங்கம் வெளிப்படையாகக் கூற முடியாத நிலைமையிலேயே அரசாங்கம் இருக்கின்றது.
அதேவேளை, அவர்கள் உயிரோடுதான் இருக்கின்றார்கள் என இலகுவாகக் கூற முடியாத இக்கட்டான சூழ்நிலைக்குள் அரசாங்கம் தள்ளப்பட்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடிகின்றது.
இத்தகைய இரண்டும் கெட்ட நிலைமையில், காணாமல் போயிருப்பவர்கள் பற்றிய பிரச்சினை குறித்து அரசாங்கம் ஏதோ ஒரு வகையில் பொறுப்பு கூறியே ஆக வேண்டும். காலம் தாழ்த்துவதன் மூலம், இந்தப் பிரச்சினையில், பாரதூரமான விளைவுகளை நோக்கி அரசு நகர்கின்றது என்றே கூற வேண்டும்.
நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற இந்தச் சூழலில் மிகவும் நுட்பமாகவும், அவதானமாகவும், மனிதாபிமான ரீதியிலும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கமும் சம்பந்தப்பட்டவர்களும் முன்வர வேண்டும்.
காணிப்பிரச்சினை
காணியென்பது ஒருவருடைய பிறப்புரிமை. இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமே இல்லையென்றே கூற வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கின்றது. காணி உரிமையாளர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருந்தாலும், அதற்கு மனிதாபிமான ரீதியில் தீர்வு காண வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அதனைத் தட்டிக்கழிக்கவோ அல்லது இழத்தடித்து பிரச்சினையை மழுங்கடிக்கவோ முடியாது.
காணிப்பிரச்சினையில் மக்களின் நிலைப்பாடே முன்னுரிமை பெற வேண்டும். அரசாங்கத்தினதோ இராணுவத்தினரதோ நலன்களை முன்னிலைப்படுத்துவது என்பதை, அராஜகமாகவும், ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்ட எதேச்சதிகார போக்கின் வெளிப்பாடாகவே கருத வேண்டும்.
ஏனெனில் ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் அரசாங்கத்திடம் அரச காணிகளைக் கோரவில்லை. அவர்கள் காலம் காலமாகக் குடியிருந்து வந்த தமது காணிகளையே திருப்பித் தருமாறு கோருகின்றார்கள். அரசாங்க சட்ட விதிகளுக்கு அமைவாக அங்கீகாரமளிக்கப்பட்ட நிலையிலேயே மக்கள் அந்தக் காணிகளில் முன்னர் வாழ்ந்திருந்தார்கள்;.
அவர்கள் சுயநலத் தேவைக்காகவோ அவர்களின் தனிப்பட்ட காரணங்களுக்காகவோ அந்தக் காணிகளை விட்டு இடம்பெயர்ந்து செல்லவில்லை. உயிரச்சுறுத்தல் ஏற்பட்டிருந்ததன் காரணமாகவே அவர்கள் இடம்பெயர நேர்ந்திருந்தது.
ஆனால் யுத்த மோதல்களைச் சாட்டாக வைத்து அந்தக் காணிகளைக் கையகப்படுத்தியுள்ள இராணுவம் தேசிய பாதுகாப்புக்காக பொதுமக்களுடைய காணிகளில்தான் நிலைகொண்டிருப்போம் என்று நியாயம் பேசுவதும், பிடிவாதம் பிடிப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு வருடங்களாகப் போகின்றன. அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள் தோற்கடிக்கபட்டு, இராணுவ ரீதியாக செயலிழக்கப்பட்டிருக்கின்றார்கள் . அதுமட்டுமல்லாமல், அரசாங்கத்தினால், இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் தமது அரசியல் முகத்தையும் இழந்திருக்கின்றார்கள்.
இந்த நிலையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. அதன் காரணமாகவே நாங்கள் மக்களுடைய காணிகளில் படை முகாம்களை அமைத்திருக்கின்றோம் என்ற வாதம் வலுவில்லாதது. ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றே கூற வேண்டும்.
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுடைய காணிகளை மீளப் பெற்றுக் கொடுப்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையானது, பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை கருத்திற்கொண்டு செயற்படுவதிலும் பார்க்க, அரசாங்கம் கூறுகின்ற காரணங்களை ஏற்றுக்கொண்டு மௌனம் சாதிக்கின்ற ஒரு போக்கிலேயே செயற்பட்டு வருவதாகக் கருதப்படுகின்றது.
காணிகளை விடுவிப்பதற்காக நடத்தப்படுகின்ற போராட்டங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்கின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கின்றார்கள்.
அந்தக் காணிகளை அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்கள். ஆனால், அரசியல் ரீதியாக நல்லுறவுறவையும் இணக்கப்பாட்டையும் கொண்டுள்ள கூட்டமைப்பின் தலைமை காணிப்பிரச்சினை குறித்து விசேடமாக அரச தலைவர்களுடன் பேச்சுக்கள் நடத்தியதாகத் தெரியவில்லை.
நம்பிக்கை ஏற்படுத்தப்படவில்லை
நாடாளுமன்றத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் பிரச்சினைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் காணிப்பிரச்சினை என்பது இழுபட்டுச் செல்கின்ற ஒரு பிரச்சினையாகவும் மிக முக்கியமானதொரு பிரச்சினையாகவும் இருக்கின்றது.
இதேபோன்று வேறு பல பிரச்சினைகளும் இருக்கின்றன. இவைகள் குறித்து அரசாங்கத்துடன் நேருக்கு நேர் விசேடமாக பேச்சுவார்த்தைகள் நடத்தி மக்களுடைய நிலைமைகள், மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் அவர்களின் மன உணர்வுகள் என்பவற்றை கூட்டமைப்பின் தலைமை எடுத்துக்கூறி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முயற்சித்;திருக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.
இத்தகைய போக்கானது, பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டமைப்பின் தலைமை மீது நம்பிக்கை இழப்பதற்கே வழி வகுத்திருக்கின்றது.
கூட்டமைப்பின் தலைமையும் ஏனைய தலைவர்களும் தமக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு விசுவாசமாக இருக்கின்றார்கள். பாதிக்கப்பட்டுள்ள மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அந்த மக்களுடைய நல்வாழ்க்கைக்காகவும் தங்களை அர்ப்பணித்துச் செயற்பட்டு வருகின்றார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தமிழ் மக்களுடைய வாக்குகளில் நாடாளுமன்றத்திற்குச் சென்று, அங்கு அமைச்சர் பதவிகள் மற்றும் சுகபோகங்களுக்கான வசதிகளைத் தேடிக்கொள்வதில் அக்கறை கொண்டு செயற்படுகின்றார்கள் என்று கூறுவதற்கில்லை.
ஆனால், அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத்தான் செயற்படுகின்றார்கள் என்பதை செயல் வடிவங்களின் ஊடாக வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு இருக்கின்றது. அதனைச் செய்திருக்கின்றார்களா என்ற கேள்வி இப்போது விசுவரூபமெடுக்கத் தொடங்கியிருக்கின்றது.
தமது தலைவர்கள், தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கின்றார்கள். அதன் ஊடாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகள் அல்லது முயற்சிகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது என்ற நிலைமையைப் பாதிக்கப்பட்ட மக்களால் காண முடியவில்லை.
அத்தகைய நிலைமையொன்று ஏற்பட்டிருப்பதாக அவர்கள் உணரவுமில்லை. இதனால் தமது தலைவர்கள் மீது அவர்கள் இயல்பாகவே சந்தேகம் கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள்.
அது மட்டுமல்ல. அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கிக் கொண்டு தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கின்றார்களே என்ற ஆதங்க உணர்வு அவர்களை படிப்படியாக ஆக்கிரமித்து வருகின்றது. இதனால், இந்தத் தலைவர்களை நம்பியிருப்பதில் இனிமேல் பயனில்லை. நாங்களே எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமு; என்று அவர்கள் உணரவும், அந்த உணர்வின் அடிப்படையில் செயற்படவும் ஆரம்பித்திருக்கின்றார்கள்.
மக்களுடைய இந்த உணர்வு பல்வேறு வடிவங்களில் இப்போது வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உணர்வு ரீதியாகவும் உரிமையின் அடிப்படையிலும் பல்வேறு அச்சுறுத்தல்கள் அடாவடித்தனங்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் ஆதரித்து வந்துள்ளார்கள். அந்த உணர்வில் இருந்து அவர்கள் இன்னும் மாறவில்லை. ஆனால், தமிழ்த் தலைவர்களால் ஒன்றும் செய்ய முடியாதிருக்கின்றதே என்ற ஏமாற்ற உணர்வுக்கு அவர்கள் ஆளாகியிருக்கின்றார்கள்.
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிச் செயற்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வ காண்பதில் அரசாங்கத்துடனான நல்லுறவை ஏன் பயன்படுத்தத் தயங்குகின்றது என்ற கேள்வி அவர்களுடைய மனங்களில் பூதாகராக எழுந்து நிற்கின்றது.
பிரச்சினையைத் தங்கள் கைகளில் எடுக்கின்ற போக்கு
இத்தகையதோர் அரசியல் ரீதியான மனநிலையிலேயே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி, அரசியல் தலைமைகளைப் புறந்தள்ளி, பதினான்கு தாய்மார்கள் வவுனியாவில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள். அந்தப் போராட்டத்தின் அடிப்படையில் தாங்களே சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுக்கள் நடத்துவதற்கு அவர்கள் முன்வந்திருந்தார்கள்.
அவர்கள் தமது அரசியல் தலைமைகள் மீது நம்பிக்கை இழந்ததன் அடையானமாகவே வவுனியா உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முன்னதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடைய உருப்படத்திற்குத் தீ மூட்டியிருந்தார்கள்.
கூட்டமைப்பின் தலைவருடைய படத்திற்குத் தீ மூட்டுவதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்ற நோக்கத்தில் செய்யப்பட்டதைவிட, அவர்கள் தமது ஏமாற்ற உணர்வை அதன் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்கள் என்றே கொள்ள வேண்டியிருக்கின்றது.
தலைவர்களுடைய உருவப்படங்களுக்குத் தீ மூட்டுவது என்பது எத்தகைய ஒரு நிலையிலும், அரசியல் ரீதியாகவோ வேறு எந்த வகையிலுமே ,ஏற்றுக் கொள்ள முடியாது. அத்தகைய நடவடிக்கை என்பது மிகவும் மோசமானது. பாரதூரமானது. ஆனால் மக்கள் அத்தகைய மனநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை, திகைப்போடும் அதிர்ச்சியுடனும் பார்க்க வேண்டிய துரதிஸ்டவசமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
அது மட்டுமல்ல. வவுனியாவில் பல மில்லியன்கள் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஸ் நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையினரும், தனியார் பேரூந்து சேவையினரும் இணைந்து செயற்படவோ சேவையாற்றவோ முடியாமல் போயிருக்கின்றது.
இந்த விடயத்தில் இருதரப்பினருக்கும் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைமையை அதிகாரிகளினால் முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை. அதேபோன்று அரசியல்வாதிகளினாலும் அந்தப் பிரச்சினைக்கு சுமுகமான ஒரு தீர்வைக் காண முடியவில்லை.
மாறாக நிலைமை மோசமடைந்தது. வடமாகாண போக்குவரத்துத்துறை அமைச்சர் டெனீஸ்வரனின் கொடும்பாவியை எரிக்கும் அளவுக்கு நிலைமை தீவிரமடைந்திருந்தது. இது வரவேற்கத்தக்கதல்ல.
அவ்வாறு தீ மூட்டியவர்களின் செயல் நியாயப்படுத்தக் கூடியதல்ல. அதேநேரம் பாதிக்கப்பட்ட தரப்பினர் அத்தகைய மன நிலைக்கு உள்ளாகத் தக்க வகையில் நிலைமைகள் மோசமடைந்ததற்கு அதிகாரிகளினதும் அரசியல்வாதிகளும் தொலை நோக்கில்லாத செயற்பாடுகளும் காரணம் என்று கூறத்தான் வேண்டியிருக்கின்றது.
பிரச்சினைளை சரியான முறையில் கையாளத் தவறும்போது பாதிக்கப்பட்ட மக்கள் அந்தப் பிரச்சினையைத் தங்களுடைய கைகளில் எடுத்துத் தமக்கு ஏற்ற வகையில் அதற்குத் தீர்;வு காணத் தயங்கமாட்டார்கள் என்பதற்கு பேரூந்து சேவையாளர்களுக்கிடையில் எற்பட்ட முறுகல் நிலைமை ஒரு நல்ல உதாரணமாகியிருக்கின்றது.
அதற்கு முன்னதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தர வேண்டும், ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அன்னையர்கள் நடத்திய சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் முதலாவது உதாராணமாக அமைந்திருந்தது.
வவுனியாவில் இடம்பெற்ற இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவிலும், புதுக்குடியிருப்பிலும் தமது காணிகளை இராணுவம் கையளிக்க வேண்டும் எனக் கோரி நடத்தி வருகின்ற மறியல் போராட்டம் இந்த வகையில் மூன்றாவது சம்பவமாக நடந்தேறி வருகின்றது.
போருக்குப் பிந்திய இலங்கையில் இத்தகைய நிலைமை உருவாகி வருவது ஆரோக்கியமானதல்ல. பிரச்சினைகளுக்கு அரசியல் தலைமையின் கீழேயே நிரந்தரமான உறுதியான தீர்வைக் காண முடியும். அதற்கு பாதிக்கப்பட்டு தீர்வுக்காக ஏங்குகின்ற மக்களை சரியான முறையில் கையாண்டு, அவர்களைச் சரியான முறையில் வழிநடத்திச் செல்லக்கூடிய அரசியல் தலைமைகள் அவசியம்.
ஏற்கனவே உருவாகியிருக்கின்ற அரசியல் தலைமைகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சரியான முறையில் கையாண்டு அவர்களுடைய நம்பிக்கையை இழந்து செல்வதென்பது விரும்பத்தக்கதல்ல.
அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை என்ற நிலைமை படிப்படியாக உயர்ந்து வருகின்றது. இந்த நிலையில் தமக்குரிய அரசியல் தலைமைகள் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து தாங்களாகவே செயற்பட முனைகின்ற போக்கும் வளர்ந்து வரப் பார்க்கின்றது.
இந்த நிலைமைகள் குறித்து தீவிர கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை முன்வர வேண்டும். இது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
Spread the love