186
இப்போது இலங்கை அரசாங்கம் நல்லாட்சி செய்கிறதாம். ஆம். சிங்கள அரசின் நல்லாட்சியில் ஈழத் தமிழ் மக்கள் வீதிக்கு வந்துவிட்டார்கள். கடும் பனியில் கடும் குளிரில் குழந்தைகளும் முதியவர்களும் வீதிக்கு வந்திருப்பதுதான் நல்லாட்சியின் வெளிப்பாடு. கேப்பாபுலவிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற மேற்கொள்ளப்படும் சதி என்று சொல்கிறார் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி. இது அரசியல் பின்புலத்துடன் நடைபெறும் போராட்டம் என்றும் அவர் கூறியிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.
அந்த மக்கள் இராணுவத்தினதோ, அரசினதோ காணியை கேட்கவில்லை. 84 குடும்பங்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்த பூர்வீக காணிகள் அவை. வளமான நிலம் அது. அந்த மக்களின் உழைப்பு அந்த நிலமே. தங்கள் சொத்தை, தங்கள் உரிமையை அந்த மக்கள் கோருகிறார்கள். நிலமின்றி வாழ முடியாமத நிலையில் அதற்காக போராடுவது எப்படிச் சதியாகும்? தமிழ் மக்களின் நிலத்தைவிட்டு இராணுவம் வெளியேற வேண்டும் என்பதும் எங்கள் நிலம் எமக்கு வேண்டும் என்பதும் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் குரல். வாழ்வின் குரல்.
இந்த மக்கள் தங்கள் காணி நிலத்திற்காக கேப்பாபுலவு மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். மகிந்த ராஜபக்சவின் இறுக்கான கால கட்டத்தில்கூட மக்கள் தங்கள் நிலத்திற்காக போராடினார்கள். மிகவும் நுட்பமான வழிமுறைகளைத் தேர்வு செய்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். இந்த மக்களின் போராட்டம் என்பது அவர்கள் மீள்குடியேற்றத்திற்கு அழைத்து வரப்பட்ட காலத்துடன் தொடங்கியது. இந்த மக்களின் நில உரிமையை மறுக்கும் இலங்கை அரசு அவர்களின் உன்னதமான போராட்டத்தை திசைதிருப்பி அரசியல் செய்யப் பாக்கிறது. சதி செய்து நிலத்தை விழுங்கப் பார்க்கிறது.
இந்த மக்களுக்காக ஈழத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்பதன் அவசியத்தை கருணாசேன ஏற்படுத்துகிறார். வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும் தென்னிலங்கையிலிருந்து வந்து சிங்களச் சகோதரர்கள் சிலர் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தென்னிலங்கை யிலுள்ள மக்களும் எதிர்வரும் காலத்தில் இந்தப் போராட்டத்தில் மக்களுடன் இணைந்துகொள்வார்கள் என்றும் இந்த மக்களின் போராட்டம் நியாயமானது என்றும் அந்த மக்கள் கூறிய வார்த்தைகள் மிகவும் நம்பிக்கை தருபவை.
மெரீனாவில் தமிழர் பண்பாட்டு உரிமைக்காக திரண்ட மக்களைப்போல கேப்பாபுலவிலும் மக்கள் திரள வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் கோரியுள்ளனர். கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக புதுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுபோல ஈழத்தின் அத்தனை நிலங்களிலும் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபடவேண்டும். இலங்கை அரசாங்கம் கேப்பாபுலவில் மாத்திரம் காணிகளை அபகரிக்கவில்லை. ஈழ நிலமெங்கும் பல்லாயிரம் ஏக்கர் காணிகளை ஆக்கிரமித்திருக்கிறது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் வாழிடங்களை விட்டு வெளியேற வலியுறுத்த இதுவே உகந்த போராட்டம்.
ஒன்பதாவது நாளாக மண் மீட்புக்காக எந்த வித விட்டுக் கொடுப்புக்கும் ஏமாற்றுதலுக்கும் இடமளிக்காமல் தொடரும் இந்த வலிய போராட்டம் ஒன்றை இலங்கை அரசுக்கு தெரிவாக சொல்கிறது. எங்களுக்கு மாதிரிகள் வேண்டாம். அசலே வேண்டும். கேப்பாலவு கிராமத்தை ஆக்கிரமித்துக் கொண்ட இலங்கை அரச படைகள் கேப்பாபுலவு மாதிரிக் கிராமம் ஒன்றை அமைத்துக் கொடுத்தது. அது முள்வேலிமுகாமை, மெனிக்பாமை போன்ற கிராமம். இன்றைக்கு இந்த மக்கள் போராடுவது மாதிரிக் கேப்பாபுலவு வேண்டாம். அசலான கேப்பாபுலவு வேண்டும் என்பதற்காகவே.
இலங்கை அரசு தமிழ் மக்கள் விடயத்தில் மாதிரிகளை திணித்து அசலை பறிக்கப் பார்க்கிறது. உரிமை, நீதி, எதிர்காலம் என்று எல்லா விடயங்களிலும் மாதிரிகளை திணித்து அசலை ஆக்கிரமிக்கும் இலங்கை அரசின் ஆக்கிரமிப்பு போக்கிற்கு எதிராக, அழிப்பு போக்கிற்கு எதிராக தமிழ் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டிய அவசியத்தை கேப்பாபுலவு மக்களின் வலிமைமிகு போராட்டம் உணர்த்துகிறது.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
Spread the love