குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் குறித்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோர் குறித்த அலுவலகம் தனக்கு தேவை ஏற்பட்டால் தனிப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனங்களுடன் உடன்படிக்கை கைச்சாத்திட அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அதிகாரம் ரத்து செய்யப்படும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2016ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 23ம் திகதி 2016ம் ஆண்டு 16ம் இலக்க சட்டத்தின் அடிப்படையில் காணாமல் போனோர் குறித்த அலுவலகச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கான அதிகாரத்தை ரத்து செய்யும் யோசனையை பிரதமர் சமர்ப்பித்துள்ளதாகவும் அதனை அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவி;க்கப்படுகிறது.